உலகம்

பேசி முடிச்சிடலாம்.. டிரம்ப், ஜி ஜின்பிங் உடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு புதின் ஆர்வம் - உக்ரைன் சொல்வது என்ன?

நவம்பர் 18-19 தேதிகளில் உச்சி மாநாடு நடைபெறுகிறது.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சீன அதிபர் மற்றும் அமெரிக்க அதிபருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தை ரஷிய அதிபர் புதின் முன்மொழிந்துள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையே கடந்த 2022 முதல் போர் நடந்து வருகிறது. அமெரிக்கா அமைதி முயற்சிகளை மேற்கொண்டபோதும் அனைத்தும் தோல்வி கண்டது.

இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக நலன்களுக்காக உக்ரைனை விடுத்து ரஷிய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

ரஷிய டீசல் ஏற்றுமதி மீதான தடை உள்ளிட்ட வர்த்தக தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

இது அமெரிக்காவில் உள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் உக்ரைன் அதிபரை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார் டிரம்ப்.

அதுமட்டுமன்றி இரு நாடுகள் இடையே எரிசக்தி ஒப்பந்தம் வந்துவிட்டது என்று டிரம்ப் அறிவித்தார். இதன்மூலம் எரிசக்தி உள்கட்டமைப்புகளை தாக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் ரஷியா தொடர்ந்து உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்புகளை தாக்கி வருகிறது.

இந்நிலையில் உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து விவாதிப்பதற்காக, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ரஷியா அதிபர் புதின் முன்வந்துள்ளார்.

பேச்சுவார்த்தை

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின்படி, அக்டோபர் 9 அன்று டிரம்புடன் தொலைபேசியில் பேசியபோது புதின் இந்த முன்மொழிவை முன்வைத்தார்.

நவம்பர் 18-19 தேதிகளில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பை நடத்த ரஷியா பரிந்துரைத்துள்ளது.

பதில்

ஆனால், முன்மொழியப்பட்ட உச்சி மாநாட்டிற்கு அமெரிக்காவோ சீனாவோ வெளிப்படையாக உறுதியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்த முன்மொழிவில் இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை என்று ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.

உக்ரைன் அச்சம்

இதனிடையே முன்மொழியப்பட்ட பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சேர்க்கப்படாதது நீடித்த அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான எந்தவொரு முயற்சிகளையும் சிக்கலாக்கக்கூடும் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

மறுபுறம், அமெரிக்கா, உக்ரைன் போர் முடிவுக்கு வருவதை விரும்பவில்லை என ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT