உலகம்

சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு... 40 பேர் காயம்!

விபத்தில் சிக்கியவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கிழக்கு சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.

விசாரணையில், விபத்தில் சிக்கிய பேருந்து, 48 பேருடன் பயணித்த நெதர்லாந்தின் சுற்றுலாப் பேருந்து என தெரியவந்துள்ளது.

ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் உள்ள கிராபுண்டன் மாகாணத்தின் சுஷ் மற்றும் ஜெர்னெஸ் கிராமங்களுக்கு இடையே உள்ள சாலையில், நேற்று (செப்.10) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

டச்சு சுற்றுலா நிறுவனமான OAD மூலம் இயக்கப்பட்ட இந்தப் பேருந்து, திடீரென சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதி, பின்னர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேறு எந்த வாகனமும் சிக்கவில்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

3 பேர் கவலைக்கிடம்

விபத்துக்குள்ளான பேருந்தில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 48 டச்சு நாட்டவர் பயணம் செய்துள்ளனர். நெதர்லாந்திலிருந்து திங்கட்கிழமை புறப்பட்ட இவர்கள், ஆஸ்திரியாவிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு ஒரு நாள் பயணமாக வந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இதில் 30 பேர் லேசான காயங்களுடனும், 7 பேர் கொஞ்சம் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டமாகவும், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, இதுதொடர்பாக விசாரணை நடத்த  சுவிஸ் அதிபர் கை பார்மெலின் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT