கனடாவின் டொராண்டோ மாநகரில், இஸ்கான் அமைப்பின் சார்பில் 54-வது ஆண்டு ரத யாத்திரை தேர்த்திருவிழா பக்திப் பரவசத்துடன் கோலாகலமாக நடந்து முடிந்தது.
பிரபஞ்சத்தின் அதிபதியான ஜகந்நாதர், தனது அண்ணன் பலதேவர் மற்றும் தங்கை சுபத்ரா தேவியுடன் டொராண்டோவின் முக்கிய வீதிகளில் உலா வந்து மக்களுக்குக் காட்சியளித்தார். இந்த திருவிழா தொடர்ந்து மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவின் முதல் நாளான ஜூலை 10 வெள்ளிக்கிழமை அன்று, அவென்யூ ரோடில் உள்ள இஸ்கான் கோவிலில் மஹா கீர்த்தனை நடைபெற்றது.
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடந்த இந்த பக்தி இசை வழிபாட்டில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர்.
விழாவின் இரண்டாம் நாள் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 11 சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. டொராண்டோவின் முக்கிய பகுதியான யாங் மற்றும் எட்வர்ட் ஸ்ட்ரீட் சந்திப்பில் இருந்து புறப்பட்ட 40 அடி உயர மலர் தேர்களை, பல்லாயிரக்கணக்கான சர்வதேச பக்தர்கள் கயிறு பிடித்து இழுத்து கொண்டாடினர்.
மிருதங்கம், கர்தல் இசையுடன் "ஹரே கிருஷ்ணா" முழக்கமிட்டு, பக்தர்கள் ஆடிய நடனம் டவுன்டவுன் வீதிகளை ஆன்மீக பூமியாக மாற்றியது. இந்த ஊர்வலம் மதியம் 1 மணியளவில் குவீன்ஸ் குவே பகுதியை வந்தடைந்தது.
இரண்டாம் நாள் தேரோட்டத்தைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) அன்று அங்குள்ள சென்டர் ஏரியை கடந்து சென்டர் தீவுக்கு மாற்றப்பட்டது. அந்த தீவிற்குள் உற்சாகமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று ஆன்மிக மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுவையான இலவச உணவு (பிரசாதம்) வழங்கப்பட்டது. பிரதான மேடையில் பக்தி பாடல்கள், பரதநாட்டியம் மற்றும் ஆன்மிக நாடகங்கள் அரங்கேறின.
பொழுதுபோக்கு அம்சங்களாக யோகா, தியானம், வேத புத்தகக் கண்காட்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான முகம் ஓவியம் போன்றவைகளும் இடம்பெற்றன.
இந்த விழாவை ஒட்டி தீவிற்குச் செல்ல டொராண்டோ நகர படகு சேவை மற்றும் இஸ்கான் அமைப்புடன் இணைந்த சிறப்பு தள்ளுபடி கொண்ட வாட்டர் டாக்ஸி வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பக்தர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்த மாபெரும் திருவிழா டொராண்டோவின் பன்முகத்தன்மையை உலகிற்குக் காட்டும் வகையில் அமைந்தது. இந்த ஆன்மிகப் பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் www.chariotfest.ca என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என இஸ்கான் நிர்வாகம் அறிவித்திருந்தது.