உலகம்

'அமெரிக்க அதிபர் எலான் மஸ்க்..' அட்டைப் படத்தில் சர்ச்சை கிளப்பிய TIME இதழ் - டிரம்ப் கொடுத்த பதில்

லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அவர் ஒரு சிறப்பு அரசு ஊழியர் மட்டுமே என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

மாலை மலர்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DOGE என்ற துறை உருவாக்கப்பட்டு அதற்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

விவேக் ராமசாமி தலைவர் பதவியிலிருந்து விலகிய நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு DOGE முழுமையாகச் சென்றுள்ளது. அரசு மற்றும் பொதுமக்களின் முக்கிய தரவுகளை அணுகும் சுதந்திரம் DOGE துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

டிரில்லியன் கணக்கான டாலர் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி வசூலுக்கான அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது. மேலும் வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விவரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி ரகசிய வீடியோ, ஆடியோகளையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க செலவினங்களை ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் முதல் 2 டிரில்லியன் டாலர் வரை குறைக்கும் திட்டத்தை மஸ்க் முன்மொழிந்தார். இதனையடுத்து "சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் தன்னிச்சையாகத் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.

இதனால் டிரம்ப் அமெரிக்க அதிபரா அல்லது எலான் மஸ்க் அதிபரா என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. உலக பணக்காரர் ஒருவர் நினைத்தால் வல்லரசு நாட்டையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது மஸ்க்- டிரம்ப் விஷயத்தில் புலனாவதைப் பலர் தெரிவித்து வருகின்றனர்.

ஏகபோக அதிகாரங்களை மஸ்க் பெற்றிருந்தாலும் தனது அனுமதி இன்றி மஸ்க் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் ஒரு சிறப்பு அரசு ஊழியர் மட்டுமே என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் நாளுக்கு நாள் அமெரிக்க அரசில் மஸ்க்கின் பிடி இறுகிக்கொண்டே வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதை பிரதிபலிக்கும் விதமாக அமெரிக்காவின் பிரபல 'டைம்' இதழ் தனது அட்டைப்படத்தில் ஒரு சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

அதில் அமெரிக்க அதிபர் இருக்கையில் எலான் மஸ்க் அமர்ந்திருக்கிறார். மேலும் வாஷிங்க்டன் (தலைநகர்) மீது எலான் மஸ்க் தொடுத்துள்ள போர் என்று தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இந்த அட்டைப்படம் வைரலான நிலையில் இதற்கு டிரம்ப் பதிலளித்துள்ளார். ஆதாவது, டைம்ஸ் இதழ் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதே தனது தெரியாது என்று கேலியாக கூறியுள்ளார்.  

TIME's new cover: Inside Elon Musk's war on Washington https://t.co/95Qictx4zP pic.twitter.com/QZ73CZqtnM