உலகம்

மாணவர்களை விட பெரிய சக்தி எதுவுமே இல்லை!.. சர்வதேச மாணவர் தின சரித்திரம் சொல்லும் படிப்பினை

எதிர்கால தலைமுறையின் கல்வியை கட்டுப்படுத்துபவர்கள் எதிர்காலத்தை கட்டுப்படுத்திகிறார்கள்.

உலகெங்கிலும் நவம்பர் 17 ஆம் தேதி சர்வதேச மாணவர் தினமாக அனுசரிக்கப்படுவதன் வரலாற்று பின்னணி

ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலும் நவம்பர் 17 ஆம் தேதி சர்வதேச மாணவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

கல்வி கற்கும் தங்கள் உரிமையைக்காக உயிரையும் தியாகம் செய்த மாணவ - மாணவிகளின் நினைவாக இந்த நாள் விளங்குகிறது.

பின்னணி

இரண்டாம் உலகப் போரின் போது, ​​தற்போதைய செக் குடியரசில் உள்ள செக்கோஸ்லோவாக்கியா நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

அங்கிருந்த மக்கள் கடும் ஒடுக்குமுறையை எதிர்கொண்டனர். எதிர்கால தலைமுறையின் கல்வியை கட்டுப்படுத்துபவர்கள் எதிர்காலத்தை கட்டுப்படுத்திகிறார்கள். எனவே கல்வியிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.

1939 அக்டோபரில், நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிராக மாணவர்கள் கிளர்ந்தெழுந்தனர்.

அத்தகைய ஒரு போராட்டத்தின் போது, ​​யான் ஓப்லெட்டல் என்ற மருத்துவ மாணவர் படுகாயம் அடைந்து, பின்னர் நவம்பர் 11 அன்று உயிரிழந்தார்.

பிராக் நகரில், நவம்பர் 15 அன்று நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலம், ஆக்கிரமிப்புக்கு எதிரான மற்றொரு ஆர்ப்பாட்டமாக அமைந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த அதில் திரண்டனர்.

விசாரணையின்றி தூக்கு

தொடர்ந்து நவம்பர் 17 அன்று, நாஜி படைகள் மாணவர் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி, நூற்றுக்கணக்கான இளைஞர்களைக் கைதுசெய்ததுடன், ஒன்பது மாணவர் பிரதிநிதிகளையும் தலைவர்களையும் விசாரணையின்றித் தூக்கிலிட்டன.

1,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், செக் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மூடப்படுமாறு உத்தரவிடப்பட்டது.

இருண்ட நாட்கள்

இந்த நிகழ்வுகள் மாணவர் இயக்க வரலாற்றின் மிக இருண்ட நாட்களில் ஒன்றாக அமைந்தன. சுதந்திரத்திற்காகவும் அநீதிக்கு எதிராகவும் போராடிய மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர்.

அவர்களின் வீரம், எதிர்ப்பின் சின்னமாகவும், கல்வி மற்றும் தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவமாகவும் விளங்கியது.

அவர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், 1941ஆம் ஆண்டு லண்டனில் உள்ள சர்வதேச மாணவர் பேரவையால் நவம்பர் 17 சர்வதேச மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது.

அன்று முதல், இந்த நாள் மாணவர்களின் துணிச்சல், கல்விச் சுதந்திரம் மற்றும் கல்விக்கான உரிமை ஆகியவற்றின் சின்னமாக நினைவுகூரப்படுகிறது.

மாணவர் சக்தி

வரலாறு நெடுகிலும் மாணவர்கள் சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி மற்றும் கல்வி உரிமைகளுக்காக போராடி வந்துள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள் மேம்பாடு, மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, வேலையின்மை மற்றும் கல்வி ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளைக் கையாள்வதில் இன்றைய மாணவர்களால் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

கல்வி வெறும் சான்றிதழ் அல்ல

சர்வதேச மாணவர் தினத்தின் முக்கிய செய்திகளில் ஒன்று கல்வியின் மதிப்பாகும். கல்வி என்பது பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை விட மேலானது. கல்வி அறிவை வழங்குகிறது, புரிதலை வளர்க்கிறது மற்றும் முடிவுகளை எடுக்க உதவுகிறது.

அதுமட்டுமின்றி, எவ்வாறு உரையாடுவது, மாறுபட்ட கருத்துக்களை மதிப்பது மற்றும் கடினமான சூழ்நிலைகளை கையாள்வது என்பதையும் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது.

தகவல்கள் கிடைப்பதாலேயே அறிவு அல்லது புரிதல் ஏற்பட்டுவிடும் என்று அர்த்தமல்ல.

தற்கால டிஜிட்டல் உலகில் சமூக ஊடக ஆதிக்கம் மேலோங்கியுள்ள சூழலளில் மாணவர்கள் தகவல்களைப் தர்க்க ரீதியாக செய்யவும், உண்மைகளைச் சரிபார்க்கவும், சுயமாகச் சிந்திக்கவும் திறன் கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT