உலகம்

1970களில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த அமெரிக்கா

இந்தியா ஈரானுடன் நட்பு வைத்துள்ளதை போன்று, அமெரிக்கா பாகிஸ்தானுடன் நட்பு வைத்துள்ளது.

பாகிஸ்தானுடன் அமெரிக்கா வைத்துள்ள உறவுகள், இந்தியாவுடனான அதன் உறவுகளை ஒருபோதும் பாதிக்காது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ மூன்று நாள் அரசாங்க பயணமாக இந்தியா வந்துள்ளார்.

மும்பையில் நேற்று தரையிறங்கிய பிறகு, அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் சந்திப்பு நடத்தினார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பேசிய ரூபியோ, சில விஷயங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு மிக அருகில் இருப்பதாகக் கூறினார்.

1970 காலகட்டம்

1970-களில் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனும், அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கும் பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்பட்டதை போன்ற ஒரு நிலைமை மீண்டும் வருகிறதா என்று ரூபியோவிடம் கேட்கப்பட்டது.

இதுகுறித்து ரூபியோ கூறுகையில், “இந்தியாவில் உள்ள அனைவரும் உறுதியாக நம்ப வேண்டிய விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானுடன் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்தவொரு நாட்டுடனும் அமெரிக்காவின் உறவு, இந்தியாவுடனான உறவை பாதிக்கும் வகையில் ஒருபோதும் அமையாது.

இந்தியாவுடனான எங்கள் உறவில் நாங்கள் அதை அவ்வாறு கருதவில்லை.

அன்றைய 1970 காலகட்டத்திற்கும் இன்றைய உலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்போது, பனிப்போர் மற்றும் தற்போது இல்லாத பலவிதமான சூழல்கள் இருந்தன.

அந்த காலத்தில், முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனும், அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கரும், இந்திய படைகள் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானை நோக்கி முன்னேறி கொண்டிருந்தபோது, பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

இந்திரா காந்திக்கு முரணான நிலைப்பாடு

மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கருத்துக்கு முரணான நிலைப்பாட்டையும் கொண்டிருந்தனர். மூன்று நாட்களுக்குப் பிறகு ‘கிழக்கு பாகிஸ்தான்’ வங்காளதேசம் என அங்கீகரிக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.

மேலும் பாகிஸ்தான், அமெரிக்காவுடன் உறவுகளைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகும் என்று கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர்,

மோதலுக்கு வழிவகுக்கக்கூடிய செயல்களை தடுக்க நாம் உதவ முடிந்தால், நமது செல்வாக்கை நேர்மறையான வழிகளில் பயன்படுத்த முடிந்தால், அது சில விதங்களில் ஒரு நேர்மறையான விஷயமாக அமையக்கூடும் என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் என்பது அமெரிக்கா "உறவு வைத்திருக்க வேண்டிய" ஒரு நாடு. அது அணு ஆயுதங்களைக் கொண்ட ஒரு நாடு.

இந்திய அரசாங்கம் ஈரான் தலைவர்களுடன் உறவு கொண்டு, அவர்களை சந்திப்பதைப் போலவே, புவியியல் ரீதியாக நாம் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய ஒரு நாடு அது” என்று கூறினார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர்

ரூபியோ மற்றும் ஜெய்சங்கர் இடையேயான சந்திப்பின்போது, இந்தியாவும் அமெரிக்காவும் எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தங்களது இருதரப்பு ஒத்துழைப்பை செவ்வாய்க்கிழமை அன்று மறுஆய்வு செய்தன.

இந்த சந்திப்பிற்குப் பிறகு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் கூறுகையில், வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மக்கள் உறவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, "நமது உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள்" குறித்து விவாதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT