தென்கிழக்கு சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, சீன, அமெரிக்க, ரஷிய அதிபர்கள் இணைந்து அமைதிக்கான கூட்டு பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் இடையே சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மூன்று நாடுகளின் தலைவர்களும் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டனர்.
இந்த கூட்டுப் பிரகடனத்தில் நான்கு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு;
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் என்ற முறையில், உலகளாவிய சவால்களை மேலும் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர மூன்று நாடுகளும் உறுதியளித்துள்ளன.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை நிலைப்படுத்தவும், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க மூன்று நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
அரசுத் தலைவர்களுக்கான சட்ட விலக்குகளுக்கு மதிப்பளிப்பதுடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் அது போன்ற பிற அமைப்புகள் தங்களது அதிகார வரம்பைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அணு ஆயுதப் போரில் யாராலும் வெல்ல முடியாது, அதை ஒருபோதும் நடத்தக் கூடாது என்பதை மூன்று நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. அணு ஆயுத அபாயங்களைக் குறைக்கவும், அணு ஆயுதப் பரவலைத் தடுக்கவும் தொடர்ந்து மூன்று நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.