நேபாளத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. 2015 நிலநடுக்கத்திற்குப் பிறகு நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான பேரிடர் இது.
இதில் நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இமயமலையில் திபெத் சீன எல்லையில் உற்பத்தியாகும் கைரோங் நகருக்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவு தான் இந்த வெள்ளபெருக்குக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
போதே கோஷி நதியில் பனிப்பாறைகள் விழுந்து ஏற்பட்ட அடைப்பினால் அதிகளவில் நீர் அடைபட்டு அணை உடைந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திபெத்தில் மீண்டும் அணை உடைந்ததால் நேபாளத்தில் இன்று மீண்டும் வெள்ளபெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், திபெத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்புப் பணிகளை சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இமயமலை உலகிலேயே மிக அதிகமான நிலநடுக்க அபாயம் கொண்ட மலைத்தொடராகும்.
இந்த பேரிடர், இந்தியா-சீனா எல்லைக்கு அருகில் சீனா கட்டி வரும் 'மெடோக்' (Medog) என்ற பிரம்மாண்டமான நீர்மின் அணை மீதான சர்வதேச கவனத்தை திருப்பியுள்ளது.
சீன ஆக்கிரமிப்பில் உள்ள திபெத் தன்னாட்சிப் பகுதியின் மெடோக் பகுதியில், யார்லுங் சாங்போ (இந்தியாவில் பிரம்மபுத்திரா) நதியின் குறுக்கே சீனா 60,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட அணையை அமைத்து வருகிறது.
2033க்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ள இந்த அணை, நிலநடுக்கங்கள் அதிகம் நிகழக்கூடிய அதிபாயகரமான மண்டலத்தில் அமைந்துள்ளது.
எனவே இந்த அணை ஒரு "நீர் வெடிகுண்டு" போன்றது என எச்சரிக்கப்படுகிறது.
இந்திய மூலோபாய நிபுணர் பிரம்மா செல்லானி, "இமயமலை மண்டலத்தில் உலகின் மிகப்பெரிய அணையைத் தொடர்ந்து கட்டும் சீனாவின் அறியாமையின் மீது இந்த நேபாள பேரிடர் சர்வதேச கவனத்தைத் திருப்புவதோடு ஒரு முக்கிய எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இந்திய திபெத் எல்லைக்கு அருகில் அமையும் இத்திட்டம், கட்டுமானத்தில் உள்ள ஒரு நீர் வெடிகுண்டாகும்.
இது நேபாளத்தை தாண்டி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை மூழ்கடிப்பதோடு, வங்கதேசத்திலும் பேரழிவை ஏற்படுத்தும்" என்று எச்சரித்துள்ளார்.
முன்னாள் இந்தியத் தூதர் ராஜீவ் டோக்ராவும், சீனா இந்த 60,000 மெகாவாட் அணையை நிறைவு செய்தால் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
சுமார் 167 பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த மெடோக் அணை திட்டத்தின் பாதுகாப்பு குறித்து சீன அரசு சார்ந்த புவியியல் ஆய்வு அமைப்பின் வல்லுநர்களே கடந்த ஜூலை மாதம் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதில் இந்த மெடோக் அணை அமையவிருக்கும் தளத்திற்கு நேர் அடியில் Paizhen Fault எனப்படும் செயலில் உள்ள Active fault line, அதாவது நிலநடுக்க அபாய கோடு இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
திபெத்தில் இருந்து பாயும் யார்லுங் சாங்போ நதி, அருணாச்சல பிரதேசத்தில் 'சியாங்' என்ற பெயரில் நுழைந்து, பின்னர் அசாமில் 'பிரம்மபுத்திரா'வாக உருவெடுத்து வங்கதேசத்திற்குச் செல்கிறது.
நதி மிகப்பெரிய 'U' வளைவை எடுக்கும் நம்சா பர்வா மலைப் பகுதியில் தான் சீனா இந்த அணையை கட்டுகிறது.
கீழ்நோக்கி பாயும் நதியின் நீரை கட்டுப்படுத்தும் ஆற்றல் சீனாவிற்கு செல்வதால், மழைக்காலத்தில் திடீரென தண்ணீரை திறந்துவிட்டால் இந்தியாவில் கடுமையான வெள்ளமும், வறட்சிக் காலத்தில் தண்ணீரைத் தேக்கினால் விவசாயப் பாதிப்பும் ஏற்படும்.
மேலும் அணையானது நிலநடுக்க மண்டலத்தில் அமைந்திருப்பதால், அணை உடையும் பட்சத்தில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்கள் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது.