உலகம்

தடையை நியாயப்படுத்த அமெரிக்கா போடும் நாடகம் - 'உளவு' குற்றச்சாட்டுக்கு சீனா பதிலடி

டிரம்ப்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அடுத்த வாரம் சந்தித்து பேச உள்ளனர்.

ஜென்சென் ஹுவாங் உடன் உறவில் இருந்த பெண், சீன உளவாளி என்ற குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது.

முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் சீன பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது சர்ச்சை ஆகியது.

அப்பெண் சீன உளவாளி என அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியதும் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சீன பெண்

சிங்கப்பூரைச் சேர்ந்த மெகா ஸ்பீட் என்ற தரவு மைய நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான ஆலிஸ் ஹுவாங்குடன் ஜென்சன் ஹுவாங் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் சீன உளவுத்துறைக்காகப் பணியாற்றியதாகவும், சீனாவிற்கு அதிநவீன சிப்களை வழங்க என்விடியாவிற்கு மெகாஸ்பீட் உதவியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும், சிப்கள் திசைதிருப்பப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கனவே ஒரு உள் விசாரணையை நடத்தியுள்ளதாகவும், அவற்றில் உண்மை இல்லை என்று கண்டறிந்துள்ளதாகவும் என்விடியா தெளிவுபடுத்தியுள்ளது.

ராஜினாமா

இதனிடையே என்விடியா ஹெல்த்கேர் இணை தலைவர் மிட்செல் என்பவருடனும் அவருக்கு தகாத உறவு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

தொடர் சர்ச்சை காரணமாக என்விடியா சிஇஓ பதவியில் இருந்து ஜென்சென் ஹுவாங் ராஜினாமா செய்துள்ளார்.

சீனா

இந்த சூழலில் தஅமெரிக்கா புனையப்பட்ட 'உளவு' கதையை உருவாக்கியதாக அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

தனது நாட்டின் மீதான தொழில்நுட்பத் தடைகளை நியாயப்படுத்துவதற்காக வாஷிங்டன் இதுபோன்ற நாடகங்களை உருவாக்குவதாக பெய்ஜிங் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில், சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றம், சுதந்திரமான புத்தாக்கம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் மூலமே சாத்தியமாகியுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

தனது நாட்டின் மீது தொழில்நுட்பத் தடைகளை விதிப்பதற்காக இதுபோன்ற உளவுக் கதைகளைப் புனைவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் அமெரிக்காவை எச்சரித்தார்.

சீனாவின் நற்பெயரைக் கெடுப்பதற்காக அமெரிக்கா முன்வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இவை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மறுபுறம், ஜென்சன் ஹுவாங் திருமணத்திற்குப் புறம்பான உறவில் தான் தவறு செய்ததை ஒப்புக்கொண்டு, தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

என்விடியாவின் இயக்குநர்கள் குழு இந்த விவகாரம் குறித்து ஒரு சுயாதீன விசாரணையை நடத்தியுள்ளது. இந்த விவகாரம் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று அக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த முழு விவகாரத்தையும் FBI விசாரித்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிப் ஏற்றுமதி

மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சிப்களை விற்பனை செய்வதில் அமெரிக்கா விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு ஜென்சன் ஹுவாங் நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகிறார்.

கடந்த ஆண்டு என்விடியாவின் 'H200' சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய டிரம்ப் அனுமதி அளித்தார்.

டிரம்ப்

ஒரு வருடத்திற்கு முன்பே உளவுத்துறை வட்டாரங்கள் இந்த உளவுப் பிரச்சினை குறித்து டிரம்பிற்குத் தெரிவித்திருந்தபோதிலும், என்விடியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கோ அல்லது சீனாவுடனான ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தம் தடைபடுவதை தடுப்பதற்கோ டிரம்ப் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் அடுத்த வாரம் சீனாவின் ஷென்செனில் நடைபெறும் ஏபெக் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக சந்தித்து பேச உள்ளனர்.

SCROLL FOR NEXT