உலகின் பல்வேறு நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் கனடாவில் மிக முக்கியமான பாரம்பரியப் பண்டிகையாகக் கருதப்படும் ‘நன்றி தெரிவித்தல் தினம்’ இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையில் அமெரிக்காவில் இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
கடந்த கால அறுவடை மற்றும் வாழ்க்கையில் கிடைத்த அனைத்து நன்மைகளுக்கும் இறைவனுக்கும், இயற்கைக்கும், சக மனிதர்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
1621-ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிளைமவுத் பகுதிக்குக் குடியேறிய ஐரோப்பியர்களுக்கும், அவர்களுக்கு விவசாயம் மற்றும் உயிர்வாழ உதவி செய்த பூர்வீக அமெரிக்கர்களுக்கும் இடையே நடைபெற்ற முதல் அறுவடை விருந்தே ‘தேங்க்ஸ்கிவிங்’ தினத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
1863-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், நவம்பர் மாதத்தின் இறுதி வியாழக்கிழமையை தேசிய நன்றி தெரிவித்தல் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தொலைதூரங்களில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி பாரம்பரிய விருந்து உண்டு மகிழ்கின்றனர். இந்த விருந்தில் வறுத்த வான்கோழி , உருளைக்கிழங்கு மசியல், குருதிநெல்லி சாஸ் மற்றும் பூசணி பை ஆகியவை முக்கிய இடம்பிடிக்கின்றன.
நியூயார்க்கில் நடைபெறும் புகழ்பெற்ற ‘Macy's Thanksgiving Day Parade மற்றும் அமெரிக்க கால்பந்து போட்டிகள் இந்த நாளின் சிறப்பம்சங்களாகும்.
இல்லாதவர்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் சமூக நலப் பணிகளில் ஈடுபடுவதையும் மக்கள் இந்த நாளில் முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளனர்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், நம் வாழ்வில் உடனிருக்கும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து அன்பைப் பரிமாறிக்கொள்ளும் இனிய நாளாக ‘Happy Thanksgiving’ அமைந்துள்ளது.