உலகம்

விசா இல்லாமல் தங்கும் வெளிநாட்டினருக்கு செக் வைத்த தாய்லாந்து

தாய்லாந்தில் விசா இல்லாமல் தங்கும் காலம் 60 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் சுற்றுலா திட்டத்தின் கீழ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட 90-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இன்றி 60 நாட்கள் வரை அந்நாட்டில் தங்க முடியும்.

தாய்லாந்திற்கு சுற்றுலாத்துறை முக்கிய பொருளாதாரமாக விளங்கி வருகிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறைவால் பொருளாதாரம் பாதித்தது.

அதேவேளையில் போதைப்பொருள் கடத்தல், பாலியல் தொழில் மற்றும் முறையான அனுமதியின்றி வெளிநாட்டினர் விடுதிகள், பள்ளிகளை நடத்துவது போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்தன.

இதனை கட்டுக்குள் கொண்டு வர தாய்லாந்து அரசு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து விசா காலத்திற்கான வரையறையை குறைக்க நேற்று அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 60 நாட்கள் கால அவகாசம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 30 நாட்கள் முதல் 15 நாட்கள் வரையே விசா இன்றி வெளிநாட்டு பயணிகள் தங்க முடியும் என சுற்றுலத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.