பாங்காக்:
தாய்லாந்து மந்திரி சபையில் பிச்சித் சைபான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் மந்திரியாக நியமிக்கப்பட்டார். பிச்சித் சைபான் கடந்த 2008-ம் ஆண்டு நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி 6 மாதம் சிறை தண்டனை பெற்றவர். அவரை மந்திரியாக நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பிச்சித் சைபான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, பிச்சித் சைபானை மந்திரியாக நியமிக்க பரிந்துரை செய்த தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது.
மந்திரிசபை உறுப்பினர்களை தகுதி அடிப்படையில் நியமிக்கும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதாகவும், பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் நடத்தை விதிகளை மீறிவிட்டார் என கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோர்ட் உத்தரவை மதிக்கிறேன் என பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், கோர்ட் தீர்ப்பை நான் மதிக்கிறேன். இந்தப் பொறுப்பில் இருந்து ஏறக்குறைய ஒரு வருடமாக நாட்டை நேர்மையாக வழிநடத்த நல்ல நோக்கத்துடன் முயற்சித்தேன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார்.
மந்திரியாக நியமிக்கப்பட்ட பிச்சித் சைபான் 6 மாத சிறை தண்டனை பெற்றவர் என்பது மட்டுமின்றி, சுப்ரீம் கோர்ட் அவரை நன்னடத்தை இல்லாதவர் என குறிப்பிட்டுள்ளது.
தற்போது ஸ்ரெத்தா தவிசின் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமரை பாராளுமன்றம் அங்கீகரிக்கும் வரை அமைச்சரவை காபந்து அடிப்படையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.