செலுத்தப்படாத கட்டணம், வாடிக்கையாளருக்கு மொட்டை அடிப்பு
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மது அருந்திவிட்டு பணம் செலுத்தாத காரணத்திற்காக வாடிக்கையாளரின் தலையை மதுபான விடுதி ஊழியர் ஒருவர் மழிக்கும் காட்சி கேமராவில் பதிவாகி அது சமூக ஊடங்களில் வெளியான நிலையில் பெரும் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் போஸ்ட் பத்திரிகை அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆகஸ்ட் 25 அன்று, 18 வயதுப் பெண் ஒருவர் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பிங்க்லாவ் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் அங்கு உண்டு, குடித்து, சுமார் 60,000 தாய் பாட் (தோராயமாக $1,800 அமெரிக்க டாலர்) என்ற பெரிய தொகையை பில்லாகச் செலுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல் துறையை அழைக்காமல் தாங்களே அத்துமீறல்
குறிப்பாக அந்தப் பெண் பணம் செலுத்தாமல் வெளியேற முயல்வதை ஊழியர்கள் உணர்ந்த காரணத்தினால் காவல்துறையை ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் அந்த விஷயத்தைத் தாங்களே கையில் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செலுத்தப்படாத கணக்கின் ஒரு பகுதியைத் தீர்ப்பதற்காக, முறைசாரா முடி வாங்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு பார் ஊழியர்கள் அந்த இளம் பெண்ணை வற்புறுத்தி இருக்கின்றனர்.
முடியை மழிக்க ஒப்புக்கொண்ட பெண்
செலுத்தப்படாத கட்டணத்திற்காக தன்னுடைய முடியை மழிக்க அந்த பெண் ஒப்புக்கொண்டதாகவும் அதன்பிறகே மொட்டை அடித்தாகவும் பார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எலக்ட்ரிக் ‘ரேசர்’ மூலம் மொட்டையடிக்கப்பட்டதாகவும், அப்போது வீடியோ எடுத்த நபர், ‘நாங்கள் உன்னை ஏமாற்றவில்லை, தலைமுடிக்கு உரிய சந்தை விலையை பில் தொகையில் ஈடுகட்ட கழிக்கிறோம்’ என்று பேசியுள்ளார்.
வெளியில் கசிந்த வீடியோ
பெண்ணிற்கு மொட்டை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, தாய்லாந்து சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் சமூக வலைதளங்களில் குற்றவியல் வழக்குகளுக்கு பதிலாக இந்த தண்டனையின் மூலம் அவர் எளிதில் தப்பித்து விட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.