உலகம்

3 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்!

தாய்லாந்து அரச குடும்பத்திலிருந்து முதல் பெண் வாரிசாக அரியணையில் அமர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோமாவில் விழுந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார் என அரச குடும்பம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 47.

கடந்த 2022ம் ஆண்டு தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த அவர் கோமாவிற்கு சென்றார். அவரது இதயத்தில் ஏற்பட்ட மைக்கோபிளாஸ்மா தொற்றால் உண்டான கடுமையான சீரற்ற இதயத் துடிப்பே இதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறினர்.

அன்றிலிருந்து பாங்காக்கில் உள்ள சுலலோங்கோர்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கோமா நிலையிலேயே தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் குணமடைய சிசிக்கைகள் அளிக்கப்பட்டபோதிலும், நேற்றிரவு 19:48 மணிக்கு காலமானதாக அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இளவரசியின் உடல் பாங்காக்கில் உள்ள கிராண்ட் பேலஸ் அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அரச மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

மன்னர் வஜிரலோங்கோர்னின் ஏழு குழந்தைகளில் மூத்தவரும், முதல் மனைவி சோம்சாவலிக்கு பிறந்தவரும் ஆவார் இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல். அரச வாரிசுரிமையில் மிக முக்கியப் பங்காற்றக்கூடியவராகக் கருதப்பட்டார்.

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். தாய்லாந்து வழக்கறிஞர் அலுவலகத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். 2012 முதல் 2014 வரை ஆஸ்திரியா நாட்டிற்கான தாய்லாந்து தூதராகப் பணியாற்றினார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதராகவும் செயல்பட்டார்.

தாய்லாந்து சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளின் மனித உரிமைகள் மற்றும் அவர்களின் மறுவாழ்விற்காகப் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிப் பாடுபட்டார். உலகில் அதிக எண்ணிக்கையிலான பெண் கைதிகளைக் கொண்ட நாடுகளில் தாய்லாந்தும் ஒன்றாகும்.

இவரின் மறைவைத் தொடர்ந்து அடுத்த வாரிசு யார் என்பதை மன்னர் வஜிரலோங்கோர்ன் இன்னும் அறிவிக்கவில்லை.