உலகம்

சிறுவனின் கண் இமைக்கு மேல் பற்கள் வளர்ந்த வினோதம்.. உலகிலேயே முதல் முறை என மருத்துவர்கள் வியப்பு

ஸ்கேனிங் ரிப்போர்ட்டை கண்ட மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இந்தியாவில் 16 வயது சிறுவனின் கண் இமைக்கும் புருவத்திற்கும் இடையில் பற்கள் வளர்ந்திருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நியூயார்க் போஸ்ட் இதழில் வெளியான கட்டுரை மூலம் இந்த அரிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அக்கட்டுரைப்படி, இந்தியாவை சேர்ந்த அந்த சிறுவனுக்கு இடது கண்ணுக்கு மேலே வீக்கம் ஏற்பட்டுள்ளது. அது வலிக்கவில்லை என்பதால் ஆரம்பத்தில் அது ஒரு சாதாரண கட்டி என்று பெற்றோர் கருதியுள்ளனர்.

சில நாட்களுக்குள், கண் இமைக்கும் புருவத்திற்கும் இடையில் உள்ள தோலில் இருந்து இரண்டு கடினமான, வெள்ளை நிறக் கட்டிகள் வெளித் தெரிய தொடங்கின.

கவலையடைந்த அவனது பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவர்கள், அவனுக்கு சி.டி ஸ்கேன் மற்றும் பிற சோதனைகளை செய்தனர்.

ஸ்கேன் ரிப்போர்ட்டை கண்ட மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கண்ணில் பல்

சிறுவனின் கண் இமைக்கு மேல் புருவத்தை ஒட்டி ஒரு பல் முழுமையாகவும் மற்றொரு பல் பாதியளவும் வளர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த அரிய சம்பவத்தின் விவரங்கள் அமெரிக்க கண் மருத்துவ அகாடமியின் இதழில் வெளியிடப்பட்டன.

இடம்பெயர்ந்த பல்

மருத்துவ ரீதியாக, வாயை தவிர உடலின் மற்ற பகுதிகளில் வளரும் பல் 'இடம்பெயர்ந்த பல்' (ectopic tooth) என்று அழைக்கப்படுகிறது.

சில சமயங்களில், இத்தகைய பற்கள் அண்ணத்திலும் மூக்கின் உள்ளேயும் வளரும்.

முதல் முறை

ஆனால், மருத்துவ வரலாற்றில் கண் குழியில் ஒரு பல் வளர்வது இதுவே முதல் முறை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வு அறிக்கையின் இணை ஆசிரியரான டாக்டர் மேகனா தன்வார், "கண்ணுக்கு மேலே, ஒரு பல் முளைத்திருப்பது உலகில் இதுவே முதல் மற்றும் ஒரே நிகழ்வாகும்" என்று கூறினார் .

பொதுவாக, மரபணுப் பிரச்சனைகள் அல்லது முகத்தில் ஏற்படும் கடுமையான காயங்கள் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படலாம்.

ஆனால், இந்த சிறுவனின் விஷயத்தில் அப்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர். இந்த ஒற்றைப் பல் தற்செயலாக தவறான இடத்தில் உருவாகியுள்ளது என்று அவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

அறுவை சிகிச்சை

மருத்துவர்கள் சிறுவனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அந்தப் பல்லை அகற்றினர்.

இந்த நிகழ்வு குறித்து டாக்டர் மேகனா தன்வார் கருத்துத் கூறுகையில், "இது எங்களுக்கு மட்டுமல்ல, உலகிலேயே இது போன்ற முதல் நிகழ்வாகும். இந்த நிகழ்வைக் கண்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம்" என்றார்.

SCROLL FOR NEXT