உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி 
உலகம்

சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி - அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன், ரஷிய நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வந்தாலும், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.

மாலை மலர்

கீவ்:

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 21-வது நாளாகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இதற்கிடையே, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீட்டிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சர்வதேச நீதிமன்ற உத்தரவு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷியாவிற்கு எதிரான வழக்கில் முழுமையான வெற்றியை பெற்றுள்ளோம். சர்வதேச நீதிமன்ற  உத்தரவிற்கு ரஷியா உடனடியாக இணங்க வேண்டும். உத்தரவைப் புறக்கணித்தால் ரஷியா மேலும் தனிமைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்...ஜப்பானின் புகுஷிமா கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை