கிவ் நகரில் ரஷிய படைகளின் குண்டு வீச்சில் சிக்கி உருக்குலைந்த வாகனங்கள். 
உலகம்

உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா 6-வது நாளாக தொடர்ந்து குண்டுவீச்சு

ரஷிய படை இதுவரை உக்ரைனின் சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டன. ஆனால் தலைநகர் கிவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை இன்னும் கைப்பற்றவில்லை.

மாலை மலர்

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது.

முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர்.

அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 80-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

அதன்பின் முக்கிய நகரங்களுக்குள் ரஷிய படைகள் நுழைந்தன. குறிப்பாக தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷிய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.

அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

மேலும் உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.

ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள் கட்டமைப்புகள் செயலிழந்த போதிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.

ரஷிய படை இதுவரை உக்ரைனின் சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டன. ஆனால் தலைநகர் கிவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை இன்னும் கைப்பற்றவில்லை.

இந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் கார்கிவ் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது ஏவுகணை வீசப்பட்டது.

அதே போல் கிவ் நகர் அருகே உள்ள எரிவாயு குழாய் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எண்ணெய் கிடங்கு முழுமையாக சேதம் அடைந்தது. மேலும் எரிவாயு குழாயில் இருந்து நச்சுபுகை வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது. நேற்றும் கிவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் தொடர்ந்து சண்டைகள் நடந்தன.

இந்த நிலையில் ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று ரஷியாவின் தாக்குதலின் தீவிரம் சற்று குறைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்து இருந்தது.

ஆனால் நள்ளிரவு முதல் ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பல இடங்களில் ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தலைநகர் கிவ்வில் மீண்டும் சண்டை உச்சக்கட்டத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நகரை கைப்பற்ற ரஷிய ராணுவம் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே இன்று கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அங்கு குண்டுகள் வீசப்பட்டதில் 11 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷியா போர் தொடுத்ததில் இருந்து இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

போர் நடந்து வந்தாலும் மறுபுறம் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா விடுத்த கோரிக்கையை உக்ரைன் இறுதியாக ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து பெலாரஸ் நாட்டின் ஹோமல் நகரில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்திய நேரப்படி நேற்று மாலை உக்ரைன், ரஷியாவை சேர்ந்த குழுவினர் பேச்சுவார்த்தை தொடங்கினார்கள்.

இந்த பேச்சுவார்த்தை 5 மணி நேரம் நீடித்தது. இதில் இரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து ஆலோசனை நடத்தினர். இதில் உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியது.

அதேபோல் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு ரஷிய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் பொதுவான வி‌ஷயங்கள் ஏற்கப்பட்டன என்று ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இன்று 2-வது நாளாக பேச்சு வார்த்தை நடக்கிறது. இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்தம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படியுங்கள்... 2024-ல் ராகுல் பா.ஜனதாவை தோற்கடிப்பாரா?- அண்ணாமலை கேள்வி