கொரோனா தடுப்பூசி 
உலகம்

ஒமைக்ரானுக்கு எதிராக ஜான்சன் நிறுவன பூஸ்டர் தடுப்பூசி 85 சதவீதம் செயல்திறன் கொண்டது - ஆய்வில் தகவல்

அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன பூஸ்டர் தடுப்பூசி ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக நன்கு செயல்படுவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஜோகன்னஸ்பர்க்:

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பல நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. 

தற்போது அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், பைசர் நிறுவனம், ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, இந்தியாவின் கோவாக்சின் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இதற்கிடையே, கொரோனா வைரசின் உருமாறிய மாறுபாடாக ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் இதன் தாக்கம் உலக அளவில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் பூஸ்டர் தடுப்பூசி ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக நன்கு செயல்படுகிறது என தென் ஆப்பிரிக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 

ஒமைக்ரான் பாதிப்பு உள்ளவர்களிடம் நடத்திய பரிசோதனையில் அந்நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசி 85 சதவீதம் செயல் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 15 முதல் டிசம்பர் 20 வரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளது.

முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதத்துக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய முதல் 13 நாட்களில் 65 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி ஏற்பட்டது என்றும், இரு மாதத்துக்கு பிறகு 85 சதவீதம் எதிர்ப்பு சக்தி உருவாகிறது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.  

இதையும் படியுங்கள்...சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் மிக நீள மெட்ரோ ரெயில் பாதை திறப்பு