உலகம்

நாளை பேச்சுவார்த்தை.. ஈரானுக்கு கடைசி வாய்ப்பு.. சம்மதிக்காவிட்டால் சர்வ நாசம் - டிரம்ப் வார்னிங்

ஹார்முஸ் ஜலசந்தியில் 2 இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதன் மூலம் ஈரான் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதத்தை கைவிட கோரி ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28 அன்று தாக்குதலை தொடங்கியது. முதல் நாள் தாக்குதலில் ஈரான் உச்சதலைவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து கடந்த 1 மாதத்திற்கும் மேலாக நடந்த தாக்குதலில் பல முக்கிய தலைவர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் கொல்லப்பட்டனர்.

பதிலடியாக ஈரான் உலகின் 20 சதவீத எண்ணெய், எரிசக்தி ஏற்றுமதி நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது.

இதற்கிடையே கடந்த வாரம் அமெரிக்கா - ஈரான் இடையே 2 வார போர் நிறுத்தம் எட்டப்பட்டது. தொடர்ந்து கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வைத்து துணை அதிபர் வான்ஸ் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள், ஈரான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாட்டை தளர்த்துவது, அணு ஆயுத தயாரிப்புக்கான யுரேனியம் செறிவூட்டலை கைவிடுவது உள்ளிட்டவற்றில் கருத்து வேறுபாடு நிலவியதால் 21 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என டிரம்ப் தெரிவித்தார். பதிலுக்கு ஈரானும் மிரட்டல் விடுத்தது.

இதற்கிடையே ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை ஒப்படைக்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அதை ஈரான் மறுத்தது.

ஈரானுடன் ஒரு நல்ல ஒப்பந்தம் எட்டப்படலாம் என துணை அதிபர் வான்ஸ் தெரிவித்தார். அதேநேரம் வரும் திங்கள்கிழமை(நாளை) பாகிஸ்தானில் வைத்து 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமைதி ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்க ஈரானுக்கு கடைசி வாய்ப்பு என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, 2015 ல் முன்னாள் அதிபர் ஒபாமா ஈரான் மீது காட்டிய அதே மென்மையான அணுகுமுறையைத் தாம் பின்பற்றப் போவதில்லை

ஈரான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், அந்நாட்டின் நிலைமை மிகவும் மோசமடையும்.

அமெரிக்கா முன்வைத்துள்ள ஒப்பந்தத்தை ஈரான் ஏற்கத் தவறினால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட முக்கியப் பொது உள்கட்டமைப்புகளை அமெரிக்கா அழிக்கும்" என மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் 2 இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதன் மூலம் ஈரான் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.