உலகம்

தைவானை வளைத்துப்போட சீனா தீவிரம்.. 'ஒரே சீனா'வுக்கு ஜி ஜின்பிங் அழைப்பு

எந்தவொரு பிரிவினைவாத நடவடிக்கையும் பொறுத்துக்கொள்ளப்படாது

தைவான் சீனாவுடன் முழுமையாக நிச்சயம் இணைக்கப்படும் என சீன அதிபர் ஜி ஜின் பிங் சூளுரைத்துள்ளார்.

சீன தேசியவாத தலைவர் சன் யாட் சென்னின் 160வது பிறந்தநாளை முன்னிட்டு தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்வில் அதிபர் ஜி ஜின்பிங் நேற்று கலந்துகொண்டார்.

ஜி ஜின்பிங்

இதன்போது உரையாற்றிய அவர், "சீனாவுடன் தைவான் முழுமையாக மீண்டும் இணைவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதை யாராலும் தடுக்க முடியாது.

தைவான் பிரச்சினையை தீர்ப்பதும், தேசிய ஒருங்கிணைப்பை அடைவதும் அனைத்து சீன மக்களின் விருப்பம்.

தைவானின் தற்போதைய சூழ்நிலையையும், அதன் மக்களின் நலன்களையும் உணர்வுகளையும் சீனா கருத்தில் கொள்ளும்" என்று அவர் கூறினார்.

'ஒரே நாடு, இரண்டு அமைப்புகள்' என்ற கொள்கையின் கீழ் அமைதியான முறையில் இணைப்பதற்கே சீனா முன்னுரிமை அளிப்பதாகவும் அதேநேரம் எந்தவொரு பிரிவினைவாத நடவடிக்கையும் பொறுத்துக்கொள்ளப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தைவான், 'ஒரே சீனா கொள்கை' மற்றும் 1992 ஆம் ஆண்டு உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒரே சீனா

இந்த ஏற்பாட்டின்படி, தைவான் தனி நிர்வாக அதிகாரங்களுடன் சீனாவின் ஒரு பகுதியாகவே நீடிக்கும்.

சீனா தைவானை தனது பிராந்தியமாகக் கருதுவதோடு, அதனைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயாராக உள்ளது.

1992 ஆம் ஆண்டு உடன்படிக்கை என்பது இரு நாடுகளை இணைக்க சீனாவால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஆகும். ஆனால் அது வாய்மொழி உடன்படிக்கை மட்டுமே. தைவான் தன்னை இறையாண்மை மிக்க தனி நாடாகவே முன்னிறுத்தி வருகிறது.

வல்லாதிக்கம்

இதனால் வல்லரசான சீனா தன் ராணுவ மற்றும் வர்த்தக வல்லாதிக்கத்தின் மூலம் தைவானின் இறையாண்மையை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

தைவான் வான்பரப்பில் 29 சீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் அத்துமீறி ரோந்துப் பணியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

1949 சீன உள்நாட்டு போருக்கு பின் 168 தீவுகளை கொண்ட தைவான் தனி நாடாக பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT