உலகம்

சூடான் உள்நாட்டு போர்: 5 மாதத்தில் 1000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் டிரோன் தாக்குதல்களில் பலி - ஐநா

சூடானில் கடந்த 3 ஆண்டுகளில் 59,000 க்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். 1.1 கோடிக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது.

நாட்டின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியே இந்த போருக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இதனால் அந்நாட்டு மக்கள் மீதான தாக்குதல் மற்றும் பெருமளவிலான இடப்பெயர்வு, பஞ்சம் ஆகியவை அங்கு தலைவிரித்தாடுகிறது.

இந்நிலையில் நடப்பு 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டுமே சூடானில் வெவ்வேறு டிரோன் தாக்குதல்களில் 1000க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வோல்கர் துர்க் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

டிரோன் தாக்குதல்

கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சூடானில் வெடித்த உள்நாட்டு போர் தற்போது 4ஆவது ஆண்டாக நீடித்து வருகிறது.

கடந்த ஜனவரி முதல் மே 2026 வரையிலான காலகட்டத்தில், இருதரப்பும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த 5 மாதங்களில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் உயிரிழந்துள்ளனர் என்பதை ஐநா மனித உரிமைகள் அலுவலகம் ஆவணப்படுத்தியுள்ளது.

மருத்துவமனைகள், பள்ளிகள், உணவுச் சந்தைகள், நீர்நிலைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்த டிரோன் குண்டுவீச்சுகள் நடத்தப்படுவது மனிதநேயமற்ற செயல்" என தெரிவித்தார்.

போர்

மேலும், சூடானில் கடந்த 3 ஆண்டுகளில் 59,000 க்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். 1.1 கோடிக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

3.4 கோடி மக்கள் கடுமையான பசி மற்றும் உணவுப் பஞ்சத்தில் தவிக்கின்றனர். சூடானில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் மலிந்துள்ளன.

ஆயுத சப்ளை

வெவ்வேறு சர்வதேச நாடுகளில் இருந்து சண்டையிடும் இருதரப்பும் ஆயுதங்களை இறக்குமதி செய்வதே இந்த போர் தீவிரமடையக் காரணம்.

சூடானுக்கு அதிநவீன டிரோன்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுவதை சர்வதேச சமூகம் உடனடியாகத் தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் இந்த உள்நாட்டுப் போர் இன்னும் மிக மோசமான கட்டத்தை எட்டும் என எச்சரித்தார்.