உலகம்

Iran War | ஹார்மஸ் திறப்பில் டுவிஸ்ட் வைத்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை

ராணுவ கப்பல்கள் அவ்வழியாக செல்ல இன்னும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போர்நிறுத்தம் வரை ஹார்மஸ் ஜலசந்தி முற்றிலுமாக திறந்திருக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்த போதிலும், அதனை கடக்க முயற்சிக்கும் கப்பல்களுக்கான நிபந்தனைகளை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை கடற்படை வகுத்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், "அனைத்துப் போக்குவரத்துகளுக்கும் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்பு படை கடற்படையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், பொதுமக்கள் கப்பல்கள் ஈரான் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றன என்றும், ராணுவ கப்பல்கள் அவ்வழியாக செல்ல இன்னும் தடை விதிக்கப்பட்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

அது, அந்த நிபந்தனைகளின் தொகுப்பை ஒரு "புதிய ஒழுங்கு" என்று குறிப்பிட்டதோடு, அது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுடன் ஒத்துப்போவதாகவும் கூறியது.

போர்நிறுத்தத்தின் போது அனைத்து வர்த்தக கப்பல்களுக்கும் பாதை "முற்றிலும் திறந்திருக்கும்" என்று அராக்சி அறிவித்தபோது தெளிவுபடுத்தாத விவரங்களை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

முன்னதாக அராச்கி எக்ஸ் தளப் பதிவில், "லெபனானில் ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்கு இணங்கும் வகையில், ஈரான் இஸ்லாமிய குடியரசின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாதையில், போர் நிறுத்தம் நீடிக்கும் காலம் முழுவதும் ஹார்மஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வர்த்தக கப்பல்களின் பயணமும் முழுமையாக திறக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது" என குறப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹார்மஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தினார். இது தொடர்பான பதிவில், "ஈரான் ஜலசந்தி முழுமையாக திறக்கப்பட்டு, முழுமையான போக்குவரத்திற்கு தயாராக உள்ளது என்று ஈரான் சற்றுமுன் அறிவித்துள்ளது. நன்றி!", என்று டிரம்ப் எழுதினார்.