சவுதியில் வேலை பார்த்து வந்த இலங்கை தமிழர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுவிக்கப்படவுள்ள நிலையில், தனது மகனை மீட்பதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்த அனைவருக்கும் நன்றி என சிவராசாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த மாத இறுதியில் நடந்த ஒரு இந்து புனித யாத்திரையின் போது, இந்து யாத்ரீகர்களை பின் தொடர்ந்து வந்த நாயை, முஸ்லிம் நபர் ஒருவர் காலால் எட்டி உதைப்பது போன்ற காணொளி இணையத்தில் பரவியது.
இந்த காணொளியில் பயனர் ஒருவர் இந்து தெய்வம் பற்றி இழிவான கருத்துகளை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இஸ்லாம் குறித்து சில கருத்துகளை சிவராசா பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சிறிது நேரத்திலேயே தான் பதிவிட்ட கருத்தை நீக்கிவிட்டு, அதற்கு மன்னிப்பு கோரும் காணொளி ஒன்றை சிவராசா வெளியிட்டார்.
சிவராசா அந்த பதிவை நீக்கியிருந்தாலும், அதன் ஸ்கிரீன்ஷாட்டுகள் மின்னஞ்சல் வழியாக சவுதி அரேபியாவில் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்திற்கு மர்ம நபர்கள் அனுப்பினர்.
இதையடுத்து ஜூலை 15 அன்று, சிவராசாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், மூன்று மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.
பின்னர் அந்த தண்டனையை மரண தண்டனையாக உயர்த்தி அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சவுதி உச்ச நீதிமன்றத்தில் அக்டோபர் 11 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை தொடர்ந்து, சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்து அக்டோபர் 14 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சிவராசா மீதான எஞ்சிய வழக்குகளும் கைவிடப்படுவதாக நவம்பர் 9 ஆம் தேதி அறிவிப்புகள் வெளியாயின. இதன்மூலம் அவர் மீதான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்துள்ளன.
சிவராசாவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் இலங்கைக்கு மீண்டும் திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தனது மகனை மீண்டும் உயிருடன் காண்பேன் என எதிர்பார்க்கவில்லை, எனது மகனை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்த அனைவருக்கும் நன்றி என சிவராசாவின் தாயார் கூறியுள்ளார்.