வீட்டு வசதி விலை நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு ஆகியவற்றை கண்டித்து, நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. ஸ்பெயின் நாட்டில் கடந்த 14 ஆண்டுகளில் முதல் பொது வேலைநிறுத்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், பார்சிலோனாவில் புதன்கிழமை முகமூடி அணிந்த போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
மாட்ரிட்டில் சுமார் 120,000 பேரும், பார்சிலோனாவில் 50,000க்கும் மேற்பட்டோரும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர். அங்கு, சில போராட்டக்காரர்கள் குப்பை தொட்டிகளுக்குத் தீ வைத்து, கடை ஜன்னல்களை உடைத்து, காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.
கூட்டத்தை கலைப்பதற்காக அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதே நேரத்தில், நாடு முழுவதும் போக்குவரத்து மற்றும் பிற பொது சேவைகள் குறிப்பிடத்தக்க இடையூறுகளை சந்தித்தன.
பார்சிலோனாவில் மாலை வரையிலும் கலவரங்கள் தொடர்ந்தன, நகர மையத்தில் அதிக எண்ணிக்கையிலான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். புகழ்பெற்ற பிளாசா டி கட்டாலுன்யாவுக்கு அருகில் உள்ள பாசேக் டி கிராசியா சாலையில் சில மோதல்கள் நடைபெற்றன.
போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது பட்டாசுகளை வீசியதாகவும், லெகோ கடை உட்பட பல கடைகளைக் கொள்ளையடித்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும், சிலர் ஆப்பிள் ஸ்டோருக்குள் நுழைய முயன்றதும் காணப்பட்டது.
நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் சுமார் நாற்பது லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இந்த வேலைநிறுத்தத்திற்கு, ஸ்பெயினின் இரண்டு மிகப்பெரிய தொழிலாளர் அமைப்புகளான UGT மற்றும் CCOO, அத்துடன் உயர்ந்து வரும் வாடகை மற்றும் வெளியேற்றங்களுக்கு எதிராகப் போராடும் குத்தகைதாரர் சங்கங்களும் ஆதரவளித்தன.