உலகம்

ஈரான் போர்: அமெரிக்காவுக்கு எதிராக ஸ்பெயின் அதிரடி முடிவு..!

அமெரிக்கா விமானங்களுக்கு தங்களது விமானப்படை தளங்களை பயன்படுத்த அனுமதி மறுத்த ஸ்பெயின், தற்போது வான்பகுதியை பயன்படுத்தவும் தடைவிதித்துள்ளது

ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி (சனிக்கிழமை) முதல் அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அமெரிக்க படைத்தளங்கள் சேதங்களை சந்தித்துள்ளன.

அமெரிக்கா தனது போர் விமானங்களை ஸ்பெயினின் ரோட்டா மற்றும் மோரோன் ராணுவ தளங்களில் நிறுத்தி வைத்திருந்தது. இந்தப் போர் விமானங்களை கொண்டு ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டது. இதற்கு தங்களின் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு ஸ்பெயின் அனுமதி மறுத்தது.

இதனால் அமெரிக்கா-ஸ்பெயின் இடையேயான வர்த்தகத்தை முற்றிலும் துண்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். டிரம்பின் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம் என்று ஸ்பெயின் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான அமெரிக்க விமானங்களுக்கான எங்களது வான் பகுதிகளை மூடி விட்டோம் என்று ஸ்பெயின் தெரிவித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் பெண் பாதுகாப்பு அமைச்சரான மார்கரிட்டா ரோபல்ஸ் இதை தெரிவித்துள்ளார். இதனால் ஈரானை தாக்க அமெரிக்க போர் விமானங்கள் ஸ்பெயின் வான்பகுதியை கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.