உலகம்

ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் 13-வது சோதனை ஓட்டம் வெற்றி! விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை!

20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்து இந்தியப் பெருங்கடலில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து, உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான 'ஸ்டார்ஷிப்' தனது 13-வது சோதனை ஓட்டத்திற்காக நேற்று மாலை 6:50 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சுமார் 400 அடி (122 மீட்டர்) உயரமுள்ள இந்த ராக்கெட், விண்வெளி வரலாற்றில் பல முக்கிய மைல்கற்களை எட்டியுள்ளது.

விண்வெளியில் சாட்டிலைட் வெளியீடு

ராக்கெட் ஏவப்பட்ட 10 நிமிடங்களில், விண்கலம் மணிக்கு 26,400 கி.மீ வேகத்தை எட்டியது. இந்த சோதனையின் முக்கிய அங்கமாக, விண்வெளியில் முதன்முறையாக புதிய ரக 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளை ஸ்டார்ஷிப் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

இதன் மூலம் சாதராண மொபைல் போன்களுக்கு நேரடியாக விண்வெளியில் இருந்து அதிவேக இணைய சேவை வழங்கும் எலான் மாஸ்க்கின் திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் விழுந்த விண்கலம்

செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திய பிறகு, ராக்கெட்டின் கீழ் பாகமான 'சூப்பர் ஹெவி பூஸ்டர்' பூமிக்குத் திரும்பியது.

கடந்த மே மாதம் நடந்த சோதனையை விட, இந்த முறை அதிக இன்ஜின்கள் இயக்கப்பட்ட போதிலும், பூஸ்டர் எதிர்பார்த்ததை விட அதிக வேகத்துடன் மெக்சிகோ வளைகுடாவில் மோதி சேதமடைந்தது என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.

மறுபுறம், ஸ்டார்ஷிப்பின் மேல் பகுதி விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் பாதுகாப்பாக நுழைந்து, திட்டமிட்டபடி இந்தியப் பெருங்கடலில் மென்மையாக விழுந்து தனது ஒரு மணி நேரப் பயணத்தை நிறைவு செய்துள்ளது.

எதிர்காலத் திட்டங்கள்

இந்த புதிய 'வெர்ஷன் 3' ஸ்டார்ஷிப் ராக்கெட், விண்வெளியில் ஆயிரக்கணக்கான AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவும், நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பவும் மிக முக்கியப் பங்காற்றவுள்ளது.

பூஸ்டர் தரையிறங்குவதில் சிறு பின்னடைவு ஏற்பட்டாலும், 2023 முதல் ஸ்பேஸ்எக்ஸ் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளில் இந்த 13-வது சோதனை ஓட்டம் ஒரு மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.