தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கலாசின் மாகாணத்தில் சுமார் 15 கோடி ஆண்டுகள் பழமையான, புதிய வகை மாபெரும் டைனோசர் இனம் ஒன்றின் புதைபடிவத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய இனத்திற்கு 'யுராகாசரஸ் கலாசினென்சிஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டைனோசரான 'நாகாடைட்டன்' கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் இரண்டாவது முக்கிய கண்டுபிடிப்பாக இது பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒரு புதிய டைனோசர் இனத்தை உறுதி செய்ய பல எலும்புகள் தேவைப்படும். ஆனால், இந்த முறை 'Scientific Reports' என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வறிக்கையின்படி, டைனோசரின் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் 'ஒரே ஒரு முதுகுத்தண்டு' எலும்பை வைத்து இந்த புதிய இனம் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த எலும்பில் உள்ள தனித்துவமான 'Y' வடிவ அமைப்பும், அதன் காற்று அறைகளும் இதுவரை உலகில் கண்டறியப்பட்ட எந்த டைனோசர் எலும்புடனும் ஒத்துப்போகவில்லை என்பதால் இது புதிய இனம் என விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த டைனோசரின் நீண்ட கழுத்தைக் குறிக்கும் வகையில், சமஸ்கிருத சொல்லான 'யுராகா' (Uraga - அதாவது பாம்பு/சர்ப்பம்) மற்றும் கிரேக்க சொல்லான 'சாரஸ்' (Saurus - பல்லி) ஆகியவற்றை இணைத்து 'யுராகாசரஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது
. இது கண்டறியப்பட்ட இடத்தைக் சிறப்பிக்கும் வகையில் 'கலாசினென்சிஸ்' என்ற மாகாணப் பெயரும் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
இது 'மாமென்சிசார்டே' என்ற தாவர உண்ணி டைனோசர் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த குடும்பத்தைச் சேர்ந்த டைனோசர்கள் உலகிலேயே மிக நீண்ட கழுத்தைக் கொண்டவை (சுமார் 25 மீட்டருக்கும் மேல் வளரக்கூடியவை). தென்கிழக்கு ஆசியாவில் முறைப்படி பெயரிடப்பட்ட முதல் 'மாமென்சிசார்டே' வகை டைனோசர் இதுவாகும்.
கடந்த மே மாதம் இதே தாய்லாந்தில் 90 அடி நீளமும் 30 டன் எடையும் கொண்ட 'நாகாடைட்டன்' என்ற பிரம்மாண்ட டைனோசர் கண்டறியப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே இந்த 2வது முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியில் ஆசியா கண்டம் தான் ராட்சத டைனோசர்களின் முக்கிய பரிணாம வளர்ச்சிக் மையமாக இருந்தது என்பதை இந்த கண்டுபிடிப்பு மேலும் உறுதிப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.