கோப்புப் படம்  
உலகம்

நீங்க தர சம்பளத்துக்கு இதுவே போதும்.. அலுவலகத்தில் 5 மணிநேரம் தூங்கி போராட்டம் நடத்திய பெண் வைரல்

தூங்கி எழுந்த பின் பின் அவர் செய்தது தான் இதில் ஹைலைட்.

விலைவாசி மட்டுமே அதிகரிக்கிறது, சம்பளம் உயர்ந்தபாடில்லை என்பது உலகம் முழுவதிலும் உள்ள ஊழியர்களின் ஆதங்கம்.

குறிப்பாக இந்தியாவில் அனுதினமும் இதே பாடுதான். அண்மையில் தொழில் நகரமான உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் போராட்டம் மற்றும் வன்முறையில் இறங்கினர்.

அலுவலகங்கள், சாலையில் செல்லும் வாகனங்கள் என கண்ணில் பட்டத்தை அடித்து நொறுக்கினர். இது நக்சலிச சதி என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். ஆனால் இது பல காலமாக அடக்கி வைக்கப்பட்ட தொழிலாளர்களின் மனக்குமுறலின் வெளிப்பாடு என பலர் வாதிடுகின்றனர்.

எப்படியாயினும் வன்முறை என்பது தீர்வல்ல. போராடுவதற்கும் ஆட்சேபனையை பதிவு செய்வதற்கும் பல வழிகள் உள்ளன.

சீன பெண் செய்த கூத்து

அந்த வகையில் சீனாவின் ஷாங்கியூ பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது குறைவான சம்பளத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மேற்கொண்ட விசித்திரமான போராட்டம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தியின்படி, அந்தப் பெண் தனது உழைப்பிற்கேற்ற ஊதியத்தை நிறுவனம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி, வேலை நேரத்திலேயே அலுவலக மேஜையில் படுத்து 5 மணிநேரம் உறங்கியுள்ளார்.

"நீங்கள் எனக்கு எவ்வளவு சம்பளம் தருகிறீர்களோ, அந்த அளவிற்குத்தான் என்னால் வேலை செய்ய முடியும்" என்ற வினோதமான கொள்கையுடன் அவர் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளார். ஆனால், தூங்கி எழுந்த பின் பின் அவர் செய்தது தான் இதில் ஹைலைட்.

தூங்கி எழுந்தவுடன், அந்தப் பெண் தனது பாஸின் மேஜையில் இருந்த ஒரு சாக்லேட்டை எடுத்துச் சாப்பிட்டுள்ளார். அந்த பாஸிற்கு Glucose Intolerance பிரச்சினை இருந்துள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது சாப்பிடுவதற்காக அவர் அந்தச் சாக்லேட்டை வைத்திருந்தார்.

சாக்லெட்டை பெண் சாப்பிட்டதால் சரியான நேரத்தில் சாக்லேட் கிடைக்காமல் பாஸ், மயக்கமடையும் நிலைக்குச் சென்றுள்ளார்.

"நீ என்னைக் கொல்லப் பார்க்கிறாயா?" என்று அவர் அந்தப் பெண்ணிடம் கோபமாகக் கேட்டுள்ளார்.

பெண் தான் அநீதிக்கு உள்ளானதாகக் கூறி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டார். தனக்கு ஆதரவு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் பாஸுக்கு ஆதரவமாக அந்த பெண்ணை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

அந்தப் பெண்ணை வேலையை விட்டு நீக்கப் போவதாக நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சீனாவில் வேலைப்பளு குறித்த விவாதங்கள் எப்போதும் நடப்பதுண்டு, ஆனால் இந்தப் பெண்ணின் அதீதப் போராட்டம் அவருக்கே எதிராகத் திரும்பியுள்ளது.