பூமி  
உலகம்

இந்த ஆண்டின் மிகக் குறுகிய நாள் இன்று!..

இந்த மில்லி வினாடி நேர வித்தியாசங்கள் உலகளாவிய செயற்கைக்கோள் அமைப்புகளுக்கு மிகவும் முக்கியமானவை.

இன்று (ஜூலை 26 - ஞாயிற்றுக்கிழமை), இந்த ஆண்டின் மிகக் குறுகிய நாளாக பதிவாக உள்ளது.

பூமியின் சுழற்சி

பூமியின் சுழற்சி வேகம் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை.

நிலவின் ஈர்ப்பு விசை, பூமியின் உட்பகுதியில் உள்ள திரவங்களின் இயக்கம் மற்றும் வளிமண்டல மாற்றங்கள் ஆகியவை பூமியின் வேகத்தை தீர்மானிக்கின்றன.

2020ஆம் ஆண்டிலிருந்து பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகப் பலமுறை மிகவும் குறுகிய நாட்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 2025 ஜூலை 10 அன்று வழக்கத்தை விட 1.37 மில்லி வினாடிகள் குறைவாக பதிவானது.

இன்று

இந்நிலையில் இன்று (ஜூலை 26 - 2026) வழக்கமான 24 மணி நேரத்தை விட பூமி தனது அச்சில் ஒரு முழு சுழற்சியை சுமார் 0.65 மில்லி வினாடிகள் அதிவேகமாக நிறைவு செய்யவுள்ளது என Timeanddate.com அறிக்கை தெரிவித்துள்ளது.

சர்வதேச புவி சுழற்சி மற்றும் குறிப்பு அமைப்பு (IERS) இதை கணித்துள்ளது.

கண் சிமிட்டும் நேரத்தை விட மிகக் குறைவான இந்த நேர மாற்றத்தை மனிதர்களால் உணர முடியாது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த முறை சுழற்சி வேகம் சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏன் முக்கியம்?

இந்த மில்லி வினாடி நேர வித்தியாசங்கள் உலகளாவிய செயற்கைக்கோள் அமைப்புகளுக்கு மிகவும் முக்கியமானவை.

ஜி.பி.எஸ் மற்றும் செயற்கைக்கோள்கள் பூமியின் துல்லியமான சுழற்சி நிலையையே அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.

நேரத்திலும் வேகத்திலும் ஏற்படும் மிகச்சிறிய மாறுபாடுகள்கூட, செயற்கைக்கோள் செலுத்தலில் இருப்பிடத்தைக் துல்லியமாகக் கணிப்பதில் பிழைகளை ஏற்படுத்தக்கூடும்.

குறையும் நீண்டகால சுழற்சி வேகம்

குறுகிய காலத்தில் பூமி வேகமாகச் சுழன்றாலும், நீண்டகால நோக்கில் அதன் சுழற்சி வேகம் படிப்படியாகக் குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புவி வெப்பமயமாதல் காரணமாக துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி, அந்த நீர் பூமத்திய ரேகையை நோக்கி நகர்வதே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

வியன்னா மற்றும் சூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, இந்த மாறுபாடு நூற்றாண்டிற்கு 1.33 மில்லி வினாடிகள் என்ற வீதத்தில் நிகழ்கிறது. இது கடந்த 3.6 மில்லியன் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிவேகமானது.