அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
உள்ளூர் நேரப்படி மாலை 5.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றி அடுக்குமாடி குடியிருப்பு, மினியாபோலிஸ் மாநாட்டு மையம், ஹோட்டல்கள் மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளன.
அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள சென்ட் தாமஸ் பல்கலைக்கழகத்தின் வளாகம் உடனடியாக மூடப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் இருவர் உள்ளூர் போலீசார் என தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்திய நபரும் போலீசார் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் குறித்து எப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் தனது எக்ஸ் தளத்தில், "மினியாபோலிஸில் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து எப்.பி.ஐ தீவிரமாக கண்காணித்து வருகிறது.
உள்ளூர் போலிசாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எங்களது சிறப்புப் படையினர் வழங்குவார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் பின்னணி என்ன, தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்துப் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.