உலகம்

பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி

திடீர் தாக்குதலைத் தொடர்ந்து பூங்காவில் இருந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாகப் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.

இங்கிலாந்தில் உள்ள பிரபல வனவிலங்கு பூங்கா ஒன்றில், பாதுகாக்கப்பட்ட புலியின் கூண்டுக்குள் நுழைந்த நபர் ஒருவர் புலியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இங்கிலாந்தில் உள்ள பிரபல வனவிலங்கு பூங்கா ஒன்றில், பாதுகாக்கப்பட்ட புலியின் கூண்டுக்குள் நுழைந்த நபர் ஒருவர் புலியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பூங்கா உடனடியாக மூடப்பட்டது.

இங்கிலாந்தின் டான்காஸ்டர் அருகே அமைந்துள்ள யார்கஷையர் வனவிலங்கு பூங்காவில் பார்வையாளர் பகுதிக்கு வெளியே உள்ள புலி அடைக்கப்பட்ட பகுதிக்குள் நபர் ஒருவர் திடீரெனக் குதித்துள்ளார். அங்கு வசிக்கும் ஆபத்தான சைபீரியன் வகை புலி அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த அவசரகால மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்தும், பலத்த காயமடைந்த அந்த நபர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாகக் காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர். உயிரிழந்தவரின் விவரங்கள் மற்றும் அடையாளம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட புலிக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்றும், அது பாதுகாப்பாக அடைப்புக்குள் இருப்பதாகவும் சவுத் யார்க்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்களுக்கு இதனால் எந்தவிதமான நேரடிப் பதற்றமும் ஆபத்தும் இல்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பூங்கா மூடல்

திடீர் தாக்குதலைத் தொடர்ந்து பூங்காவில் இருந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாகப் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். மேலும், சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவத்திற்குரிய வீடியோக்கள் பரவி வருவதால், பொதுமக்கள் யாரும் அந்தத் துயரமான காட்சிகளைப் பகிர வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதுகாப்பான முறையில் இயங்கி வந்த இந்த வனவிலங்குப் பூங்காவில் நடந்த இந்தத் திடீர் விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT