வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா, தான் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் நாடு திரும்புவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் புதிய பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை கோரி டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அப்போது ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனா, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் எப்படியும் வங்கதேசம் திரும்புவேன் என்று அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது வழக்கறிஞர் மூலம் டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், முன்னாள் ஆட்சியாளர்களால் ரத்து செய்யப்பட்ட தனது குடிமை ஆவணங்களை மீண்டும் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அவரது தாயக வருகைக்கான மிக முக்கியமான படியாகப் பார்க்கப்படுகிறது.
மறுபுறம், ஷேக் ஹசீனாவை இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட நாடு கடத்தும் ஒப்பந்தத்தின் கீழ் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஹசீனாவை 'பயங்கரவாதி' என்றும் தேடப்படும் குற்றவாளி என்றும் வர்ணித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், அவரை இந்தியா திருப்பியளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. எனினும், கடந்த ஆண்டு சிறப்பு தீர்ப்பாயம் ஒன்று ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும், அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பையும் விசாரணையின் சட்டப்பூர்வத்தன்மையையும் அவர் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில், அவரது அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் நீண்டகால அரசியல் எதிரியின் குடும்பத்தைச் சேர்ந்த தாரிக் ரஹ்மான் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். இந்தச் சூழலில், ஷேக் ஹசீனாவின் நாடு திரும்பும் முடிவு வங்கதேச அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.