உக்ரைன் போரில் பரவலான பாலியல் வன்முறை நடப்பதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு திடுக்கிடும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பாவின் நேட்டோ நாடுகளில் இணைய முயன்றதால் உக்ரைன் மீது 2022 இல் ரஷியா போர் தொடுத்தது.
5வது ஆண்டாக போர் முடிவின்றி நீடித்து வரும் நிலையில் போர்ச் சூழலில் நிகழும் பாலியல் வன்முறை குறித்து அதிர்ச்சியூட்டும் அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது.
ரஷியா போர் தொடுத்த பின்னர், பொதுமக்களுக்கும் போர்க் கைதிகளுக்கும் எதிராகப் பரவலான பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐ.நா கண்காணிப்புக் குழு மேற்கொண்ட ஆய்வில், பிப்ரவரி 2022 முதல் ஜூலை 2026 வரையிலான காலக்கட்டத்தில் உறுதி செய்யப்பட்ட 1,004 பாலியல் வன்முறைச் சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளது.
ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்களில் 89% ரஷியத் தரப்பால் செய்யப்பட்டவை. ரஷிய ராணுவம், சிறைத் துறை மற்றும் பாதுகாப்பு முகமைகள் இதில் அடங்கும்.
11% சம்பவங்கள் உக்ரைனிய அதிகாரிகளால், உக்ரைன் ராணுவம் மற்றும் சிறைத்துறையால் செய்யப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ரஷியாவிற்குள் உள்ள சிறை முகாம்களில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பாலியல் உறுப்புகளை சிதைத்தல் மற்றும் சோவியத் காலத்து சாதனமான 'Tapik' மூலம் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுதல் போன்ற கொடூரமான சித்திரவதைகள் இதில் அடங்கும்.
வழக்கமாகப் போர்ச் சூழலில் பெண்களே அதிகம் பாதிக்கப்படும் நிலையில், சிறை முகாம்களில் பாலியல் சித்திரவதைக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் ஆண் போர்க் கைதிகள் ஆவர்.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளும் கடுமையான பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷியப் போர்க் கைதிகளுக்கு எதிராக பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் மற்றும் உறுப்புகளில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும், உக்ரைனியப் படைகளால் ரஷிய போர்க் கைதிகள் யாரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் பதிவாகவில்லை என ஐ.நா குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் கூறுகையில், "ஆவணப்படுத்தப்பட்டுள்ள இந்த அருவருக்கத்தக்கச் செயல்கள் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
உக்ரைனில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைகளுக்கு மத்தியில் இத்தகைய அத்துமீறல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கக்கூடும் என அஞ்சுகிறேன்" என்று கவலை தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் உள்ள ரஷியாவின் தூதரகக் குழு இந்த அறிக்கை குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டது.
இந்த அறிக்கை ரஷியாவின் மனித உரிமை மீறல்களை உலகிற்குச் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறிய உக்ரைன் வெளியுறவு அமைச்சகம், தனது தரப்பு மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.