இஸ்லாமாபாத் டி-சவுக்கில் டெஸ்லாவுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட தானியங்கி கார், இன்டர்நெட் துண்டிப்பால் கட்டுப்பாடு இழந்து போலீஸ் வாகனத்தில் மோதி விபத்து - வீடியோ வைரல்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள டி-சவுக் பகுதியில், 'டெஸ்லா' நிறுவனத்தின் சுயவிவரக் கார்களுக்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீனத் தானியங்கி காரின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அப்போது எதிர்பாராத விதமாக இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அங்கிருந்த போலீஸ் வாகனத்தின் மீது நேராக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த ஒட்டுமொத்த சம்பவமும் நேரலையில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபோட்டாபாத் நகரைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆர்வலர் எஹ்சான் ஜாபர் என்பவர் உருவாக்கிய இந்த ரிமோட் கண்ட்ரோல் காரை, பாகிஸ்தான் பத்திரிகையாளர் முகமது ஆலிஜா நேரலையில் செய்தியாகப் பதிவு செய்து கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்து குறித்து பத்திரிகையாளர் ஆலிஜா கூறுகையில், "இந்த கார் சாட்டிலைட் மற்றும் இன்டர்நெட் உதவியுடன் ரிமோட் மூலம் இயக்கப்பட்டது. சோதனை ஓட்டம் சிறப்பாகவே போய்க்கொண்டிருந்தது.
ஆனால், திடீரென இன்டர்நெட் சிக்னல் துண்டிக்கப்பட்டதால், கார் கட்டுப்பாட்டை இழந்து நேராக போலீஸ் வாகனத்தின் மீது மோதியது" என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும், "இந்த விபத்து குறைந்த போக்குவரத்து கொண்ட அதீத பாதுகாப்பு வளையத்திற்குள் நடந்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுவே மக்கள் நடமாட்டம் மிகுந்த பொதுச்சாலையாக இருந்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வரவேற்கத்தக்கது என்றாலும், மனித உயிர்களைப் பணயம் வைத்து இதுபோன்ற ஆபத்தான சோதனைகளைச் செய்யக்கூடாது. பாதுகாப்புக்கே நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானின் தொழில்நுட்ப திறமையை உலகிற்கு பறைசாற்ற முயன்ற இந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் கடுமையான ட்ரோல்களுக்கும் மீம்ஸ்களுக்கும் உள்ளாகி வருகிறது.
குறிப்பாக, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் ஷோரி இந்த வீடியோவைப் பகிர்ந்து, "தானாக இயங்கும் டெஸ்லா கார்களுக்குப் பாகிஸ்தானின் பதிலளிக்கும் விதமாக இதோ: 'மஸ்லா' (சிக்கல்)" என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் பலரும், "இவ்வளவு திறமையாகப் பார்த்துப் பார்த்து போலீஸ் வண்டியிலேயே போய் மோதியிருக்கிறதே!", "போலீஸ்காரர்களிடம் உதை வாங்காமல் தப்பித்ததே பெரிய விஷயம்" எனப் பல்வேறு நகைச்சுவையான கமெண்ட்டுகளைப் பதிவிட்டு இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.