உலகம்

2ஆம் கட்ட பேச்சுவார்த்தை.. ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் பயணம் | Iran-US war

யுரேனியம் கைவிடல், ஹார்முஸ் ஜலசந்தி ஆகியவற்றில் உடன்பாடு இல்லாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தைத் தணிப்பதற்கான மிக முக்கியமான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெற உள்ளது.

இதற்காக ஈரான் வெளியுறவுத் அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று இரவுக்குள் அவர் இஸ்லாமாபாத் சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா சார்பில் அதிபர் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர், ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விரைவில் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் தலைநகரில் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கலந்துகொண்டார். 21 மணி நேர பேச்சுவார்த்தையில் யுரேனியம் கைவிடல், ஹார்முஸ் ஜலசந்தி ஆகியவற்றில் உடன்பாடு இல்லாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

2 வார போர் நிறுத்தம் கடந்த ஏப்ரல் 22 உடன் முற்று பெற்ற நிலையில் இந்த பேச்சுவார்த்தை நீடித்த அமைதிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஈரானுக்கு கிடைக்கும் கடைசி வாய்ப்பு எனவும் உடன்பாட்டுக்கு வரவில்லை என்றால் ஈரான் உள்கட்டமைப்புகள் சர்வ நாசம் செய்யப்படும் என டிரம்ப் முன்னதாக மிரட்டியிருந்தார். ஆனால் ஈரான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறது.