உலகம்

ஏவுகணை, டிரோன் தாக்குதலை முறியடித்த சவுதி அரேபியா.. ஈரான் தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

ரியாத் நகரில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

நாட்டின் கிழக்கு பகுதியில் இன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் முக்கிய பொருளாதார மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ஏவப்பட்ட 4 க்கும் மேற்பட்ட டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக ரியாத் நகரில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான், அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியாவில் அமெரிக்க ராணுவ தளம் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருகிறது.

இந்த சூழலில் ஈரான் தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டை விட்டு அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேறும்படி சவுதி அரேபியா கட்டளையிட்டுள்ளது.

ஈரானின் வெளிப்படையான தாக்குதல் தங்கள் நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீதான தாக்குதல் சர்வதேச விதிகளை மீறுவதாகும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஈரானின் ராணுவ அத்துமீறல் அந்த நாடு அடிக்கடி கூறும் இஸ்லாமின் சகோதரத்துவ விழுமியங்களை அதுவே மீறும் செயலாகும் என்று விமர்சித்துள்ளது.

இது இரு நாட்டு உறவுகளில் நீண்ட நாள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.