உலகம்

ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்காவின் உதவியை நாடும் சவுதி அரேபியா - ஐ.நா மாநாட்டில் டிரம்பை சந்திக்க உள்ள பாகிஸ்தான் பிரதமர்

சவுதி பாதுகாப்புக்கு ஆதரவாக அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஐ.நா உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உதவி கேட்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்

சவூதி அரேபியாவுடனான மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம், ஹவுதிகளுக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையைத் தானாகவே உள்ளடக்காது என்று இஸ்லாமாபாத் தெளிவுபடுத்த முயன்றதைத் தொடர்ந்து இந்தத் தொடர்பு ஏற்பட்டது.

முன்னதாக சவூதி அரேபியாவின் தெற்கில் அமைந்துள்ள நகரங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்ந்தால், மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் தொடங்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் ஹவுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பாகிஸ்தான் பிரதமர் தொலைபேசி உரையாடல்

இதையடுத்து நேற்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்துரையாடினார். அப்போது அவர், சவூதி அரேபியாவிற்கு பாகிஸ்தான் தனது முழுமையான ஆதரவை தருவதாக தெரிவித்தார்.

மேலும், ஹவுதிகளின் தாக்குதல்கள் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி விநியோகத்தை மேலும் சீர்குலைப்பதாக கூறினார்.

பிராந்தியத்தில் பதட்டங்களைத் தணித்து அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளைத் தானும், பாதுகாப்புத் துறை அமைச்சர் சையத் ஆசிம் முனீர் மற்றும் துணைப் பிரதமர் முகமது இஷாக் தார் ஆகியோரும் தொடர்வோம் என்று ஷெரீஃப், முகமது பின் சல்மானிடம் கூறினார்.

மேலும், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சவூதி பட்டத்து இளவரசர் வழங்கிய ஞானமான மற்றும் விவேகமான தலைமைத்துவத்தையும் அவர் பாராட்டினார்.

ஏமனில் போர் பதற்றம்

ஏமனில் பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு, ஈரான் ஆதரவு ஹவுதி படைகளுக்கும் சவுதி ஆதரவு அரசாங்கப் படைகளுக்கும் இடையே சண்டை தீவிரமடைந்துள்ளது.

ஹவுதிகள் சமீபத்தில் செங்கடலில் உள்ள முக்கிய துறைமுகமான மோக்காவையும், பாப் அல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஒரு தீவையும் கைப்பற்றியுள்ளனர். இது, உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றின் பாதுகாப்பு மீது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையே சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மற்ற உறுப்பு நாடுகள் தங்களது தாக்குதல்களை நடத்தும் என ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் முதன்மையாக தற்காப்புத் தன்மை கொண்டது என்றும், இது பாகிஸ்தான் படைகளைத் தாக்குதல் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடத் தானாகவே கட்டாயப்படுத்தாது என்றும் இஸ்லாமாபாத் பின்னர் வலியுறுத்தியுள்ளது.

இதையடுத்து சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் உறுதியான ஆதரவை முகமது பின் சல்மான் பாராட்டியுள்ளார்.

ஏமன் மோதல் தீவிரமடைந்துள்ளதால், சவூதி அரேபியாவின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.

சவூதி ஆதரவு பெற்ற அரசாங்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமையன்று, மோக்கா, துபாப் மற்றும் தைஸ் மாகாணத்தின் பிற பகுதிகளில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல்களைத் தொடுத்தன, அதே நேரத்தில் ஹவுதிகள் அண்டை நாடான சவூதி அரேபியாவை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அமெரிக்க-ஈரான் மோதலுக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வர்த்தகக் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கும் வேளையில், இந்த சண்டையானது ஒரு முக்கியமான கடல்வழித் தடைப் பகுதியான பாப் எல்-மண்டேப் ஜலசந்தியில் இடையூறுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் உதவியை நாடும் பாகிஸ்தான்

இந்தச் சூழ்நிலையில், சவுதி அரேபியா அமெரிக்காவின் ஆதரவையும் நாடியுள்ளது. இருப்பினும், ஹவுதிகளுக்கு எதிரான நேரடி அமெரிக்க ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார்.

இதையடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற இருக்கும் ஐ.நா பொதுச்சபை மாநாட்டின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 23 அன்று பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ளார்.

SCROLL FOR NEXT