உலகம்

ரஷிய நாடாளுமன்ற தேர்தல் - எதிர்பார்த்தவாறு புதினின் கட்சி மீண்டும் அமோக வெற்றி!

மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பெரும்பான்மையை புதினின் கட்சிப் பெற்றுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கிய பின்னர், ரஷியாவில் நடைபெற்றுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதினின் கட்சி எளிதில் வெற்றிப் பெற்றுள்ளதாக அந்நாட்டின் மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமாவின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (செப்.18) முதல் ஞாயிற்றுக்கிழமை (செ.20) வரை நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.

இது பெரும்பாலும் எதிர்பார்த்த முடிவுதான் என்றாலும், உக்ரைனுக்கு எதிரான போருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வாக்கு செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

வாக்கு சதவீதம்

மத்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 95% சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் புதினின் யுனைடெட் ரஷியா கட்சி சுமார் 58% வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

இது கடைசியாக 2021-ல் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி பெற்ற 49.8% வாக்குகளை விட அதிகமாகும்.

450 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற கீழ் அவையில் யுனைடெட் ரஷியாவுக்கு 355 இடங்கள் கிடைத்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பலத்தை அக்கட்சி பெற்றுள்ளது.

மற்ற கட்சிகளின் வாக்கு சதவீதம்

ரஷ்ய கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சி (CPRF) 13.84 சதவீதமும், தீவிர தேசியவாத ரஷ்யாவின் தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDPR) 8.9 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் வாக்குப்பதிவு

வாக்களித்தவர்களில், 2022-ல் ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்துக்கொண்ட உக்ரைனின் நான்கு பிராந்தியங்களான டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சோன் மற்றும் சபோரிசியாபகுதிகளில் வசிப்பவர்களும், 2014-ல் கைப்பற்றப்பட்ட கிரிமியாவின் மக்களும் அடங்குவர்.

ஐக்கிய நாடுகள் சபையும், உலகின் பெரும்பாலான நாடுகளும் கிரிமியாவையும் மற்ற ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனியப் பிராந்தியங்களையும் ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கவில்லை.

உக்ரைன் கூறுவது என்ன?

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி மக்களும் வாக்களித்துள்ள நிலையில், இத்தேர்தலை உக்ரைன் சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT