கீவ் நகரில் உள்ள உக்ரைனின் SBU பாதுகாப்பு சேவைகளின் தலைமையகத்தை ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அதேவேளையில், சம்பவ இடத்திற்கு அருகில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்ததை ஏ.எஃப்.பி. செய்தியாளர் ஒருவர் கண்டார்.
உக்ரைன்ஸ்கா பிரவ்தா செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், கட்டிடத்தின் முன்புறத்தில் உள்ள குறைந்தது இரண்டு ஜன்னல்களில் இருந்து கருப்பு புகை வெளியேறுவது போல தெரிந்தது, அதே நேரத்தில் வெளியே ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.
நகர மையத்தின் மீதான தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்தனர் என கீவ் நகர மேயர் விட்டாலி கிளிச்கோ தெரிவித்தார். சமீபத்திய வாரங்களில் ரஷியா, உக்ரைன் மீதான தனது பகல் நேர தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. சில சமயங்களில், வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்க கடினமான ஜெட் விமானங்களையும் அது பயன்படுத்துகிறது.
தாக்குதலுக்கு பிறகு "SBU-வின் தலைவர் ஒலெக்சாண்டர் போக்லாடுடன்" பேசியதாக ஜெலென்ஸ்கி கூறினார். "துரதிர்ஷ்டவசமாக, கீவ் நகரின் வோலோடிமிர்ஸ்கா தெருவில், புனித சோபியா பேராலயத்திற்கு எதிரே உள்ள SBU-வின் மைய கட்டிடத்தின் மீது ஒரு ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியுள்ளது," என்று ஜெலென்ஸ்கி டெலிகிராமில் தெரிவித்தார்.
"அந்தக் கட்டிடத்தில் உள்ள பாதுகாப்பு சேவை தலைவரின் அலுவலகத்தை ஆளில்லா விமானம் நேரடியாகs குறிவைத்தது," என்று அவர் மேலும் கூறினார்.
"எல்லாம் தயாரானதும், ரஷியர்களுக்கு பொருத்தமான, உறுதியான பதிலடியை கொடுக்குமாறும், முடிந்தால் இந்த தாக்குதலை பிரதிபலிக்கும் வகையிலான பதிலடியை கொடுக்குமாறும்" SBU தலைவருக்கு அறிவுறுத்தியதாக ஜெலன்ஸ்கி கூறினார்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மருமகனான ரஷியா பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், ரஷிய டிரோன் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.