மாஸ்கோவில் உள்ள ஒரு இத்தாலிய உணவகத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிக்கப்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டு, 21 பேர் காயமடைந்துள்ளதாக ரஷிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷியாவின் தலைநகர் அருகிலுள்ள குட்ரின்ஸ்காயா சதுக்கத்தில் புகழ்பெற்ற ஸ்டாலின் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில், நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்தது.
இந்த நிகழ்ச்சி நடந்த உணவகத்திற்குள் வெடிபொருட்களை எடுத்துக்கொண்டு இரவு 8 மணியளவில் பெண் ஒருவர் நுழைய முயன்றுள்ளார். அப்போது அவரை அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து அந்த பெண் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில், அவர் உள்பட பாதுகாப்பு ஊழியர் மற்றும் உணவகத்திற்கு வந்திருந்த ஒருவர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்து தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர் பட்டியலை வெளியிடவில்லையும், இந்த தாக்குதல் சம்பவத்தில் இலக்கு யார் என்பது குறித்தும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து ரஷிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், நிகழ்ச்சி நடைபெற்ற அந்த நிறுவனத்தின் சமையலறையில் வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறியுள்ளது.
இதையடுத்து அந்த பகுதியை சுற்றியுள்ள சாலைகள் சிறிது நேரம் மூடப்பட்டன. நகரத்தின் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொது சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
சமீபத்திய ஆண்டுகளில், ரஷிய தலைநகரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல மூத்த ரஷ்ய ராணுவ அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்தத் தாக்குதல்களுக்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.