trump - putin 
உலகம்

Trump | கியூபாவை தொட்டால்... டிரம்பின் எச்சரிக்கைக்கு ரஷியா கண்டனம்

கியூபாவை கைப்பற்றுவேன் என்ற டிரம்பின் எச்சரிக்கைக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

ஈரான் மீது போர் தொடுத்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் பார்வை இப்போது திடீரென கியூபா மீது திரும்பியுள்ளது.

கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகால பகை உள்ள நிலையில், கியூபாவுக்கு வந்து கொண்டிருந்த வெனிசுலா நாட்டு எண்ணெய் வினியோகத்தை அமெரிக்கா நிறுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள. எரிபொருள் பற்றாக்குறையால் நாடு முழுதும் கடும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் ஈரானுடனான போர் தணிந்ததும் கியூபா பக்கம் திரும்பவிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப் , "கியூபாவை விடுவித்தாலும் சரி அல்லது கைப்பற்றினாலும் சரி, என்னால் அந்த தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். கியூபாவை வசப்படுத்தும் கௌரவம் எனக்குக் கிடைக்கும். கியூபாவை நட்பார்ந்த முறையில் கைப்பற்றுவது பற்றி அந்நாட்டு அதிகாரிகளுடன் தமது நிர்வாகம் பேசி வருகிறது. ஈரானுடனான போர் தணிந்ததும் கியூபா பக்கம் திரும்ப இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், கியூபாவை கைப்பற்றுவேன் என்ற டிரம்பின் எச்சரிக்கைக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், "ஒரு நாட்டை மிரட்டுவது சட்டவிரோதம். கியூபாவுடன் அசைக்க முடியாத ஒற்றுமையுடன் இருக்கிறோம். கியூபாவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.