உலகம்

ரஷிய ராணுவம் தாக்குதல்: உக்ரைன் நகரங்கள் மீது சரமாரியாக ஏவுகணைகள் வீச்சு

உக்ரைன் தலைநகர் கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டன.

ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இருதரப்பும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

ஏவுகணைகள் வீச்சு

இந்தநிலையில் இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ், டினிப்ரோ, கிரிவி ரிஹ் உள்பட பல நகரங்களை நோக்கி பல ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தியது. உக்ரைன் முழுவதும் இந்த தாக்குதல் தீவிரமாக நடந்தது.

ரஷியா ஒரு பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடந்தது.

இதையடுத்து பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள், மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சம் அடைந்தனர். ரஷியாவின் தாக்குதல்களில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டன.

மேலும், தெற்கு ரஷியாவின் நோவோரோசிஸ்க் பகுதியில் இருந்து குரூஸ் ஏவுகணைகள் உக்ரைனை நோக்கி ஏவப்பட்டன என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. ஏவுகணைகளை தடுக்க வான்பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டன. ஆனாலும் ஏவுகணைகள் உக்ரைனுக்குள் விழுந்து வெடித்தன.

ரஷியாவின் இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்து உள்ளனர்.