உலகம்

உக்ரைனின் வணிக வளாகம் மீது தாக்குதல்: ரஷியாவிற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!

22 குழந்தைகள் உட்பட 130-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷியப் படைகள் உக்ரைனின் பொதுமக்களைக் குறிவைத்து மீண்டும் ஒரு கோரத் தாக்குதலை நடத்தியுள்ளன.

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ் நகரில் உள்ள மிகப் பெரிய வணிக வளாகத்தின் மீது நேற்று ரஷியா ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

மீட்புக்குழுவை குறிவைத்த ‘டபுள்-டேப்’ உத்தி

மாலை நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வணிக வளாகத்தின் மீது முதல் ட்ரோன் விழுந்து வெடித்தது.

இதில் கட்டிடம் தீப்பற்றி எரியத் தொடங்கியதால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களும், அவசர கால மீட்புக்குழுவினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

முதல் தாக்குதல் நடந்து சரியாக அரை மணி நேரம் கழித்து, மீட்புப் பணியில் இருந்தவர்களைக் குறிவைத்து ரஷ்யா இரண்டாவது ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

இந்த அடுத்தடுத்த தாக்குதல்களால் அப்பகுதியே பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது.

பாதிப்பு விவரங்கள்

இந்த இரட்டைத்தாக்குதலில் இதுவரை 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 22 குழந்தைகள் உட்பட 130-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 குழந்தைகள் உட்பட 29 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக பிராந்திய ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம்

இந்த கொடூரத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

"இது முற்றிலும் மனிதாபிமானமற்ற, இழிவான செயல். அவசரக்கால மீட்புப் பணியாளர்களைக் குறிவைத்தே இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கொடூரம் பயங்கரவாதச் செயலுக்குச் சற்றும் குறைந்ததல்ல. ரஷியாவின் இந்த சர்வதேசப் பயங்கரவாதத்திற்கு உலக நாடுகள் அவற்றுக்குப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். இதற்கு உக்ரைன் படைகள் நிச்சயம் தகுந்த பதிலடி கொடுக்கும்" என்று கூறியுள்ளார்.

மைக்கோலைவ் நகரிலும் தாக்குதல்

இதற்கிடையே, தெற்கு உக்ரைனின் மைக்கோலைவ் நகரிலும் ரஷியா நடத்திய மற்றொரு ட்ரோன் தாக்குதலில், 3 சிறுவர்கள் உட்பட 4 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT