உலகம்

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள புதினுக்கு அழைப்பு: ரஷ்யா பரிசீலனை செய்வதாக தகவல்

புதின் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வார் என நம்புவதாக மார்கோ ரூபியோ கருத்து தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அதிபர் விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ விடுத்த அழைப்பை ரஷ்யா பரிசீலிக்கும் என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ரஷ்யா பரிசீலனை செய்யும்:

"ஊடகங்களில் வெளியான செய்திகளையும், வெளியுறவுத்துறை அமைச்சரின் அறிக்கைகளையும் நாங்கள் பார்த்தோம். இந்த அழைப்பிற்கு நாங்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று பெஸ்கோவ் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.

நாங்கள் ஒரு முடிவை எடுத்து, இராஜதந்திர வழிமுறைகள் மூலம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

ரூபியோ நம்பிக்கை:

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்த பிறகு பேசிய ரூபியோ, புதின் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வார் என நம்புவதாகவும், மேலும் இந்த சந்திப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் புதின் உரையாடுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார்.

சீன அதிபர் பயணம்:

முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சீன அதிபர் ஜி-யை வரவேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலோனியா டிரம்ப் விமான நிலையத்திற்கு முன்கூட்டியே சென்றனர். அமெரிக்கா வந்தடைந்த சீன அதிபரை டிரம்ப் மற்றும் மெலோனியா உற்சாகமாக வரவேற்றனர்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரசுமுறைப் பயணத்தின் சூழலில், கடந்த ஆண்டு எட்டப்பட்ட அமெரிக்க-சீன வர்த்தக ஒப்பந்தம் நவம்பர் மாதத்துடன் காலாவதியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2015-ஆம் ஆண்டில் அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவால் வரவேற்கப்பட்டதற்கு பிறகு, வாஷிங்டனுக்கு ஜி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பயணத்தில், விமான நிலையத்தில் வரவேற்பு, ஆலோசனைகள் மற்றும் அரசுமுறை விருந்து ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT