உலகம்

உக்ரைன் தெற்குப் பகுதியில் ரஷ்யா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 26 பேர் உயிரிழப்பு

முன்னணி பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லவும், மக்களை வெளியேற்றவும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

உக்ரைனின் தெற்கு பகுதியில் ரஷ்யா நடத்திய குண்டுவீச்சில், மனிதாபிமான உதவி வழங்கும் மையம் மற்றும் அதன் அருகில் இருந்த தங்குமிடம் ஆகியவை தகர்க்கப்பட்டன. இதில் 26 பேர் உயிரிழந்ததாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தகவலில், மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பள்ளி கட்டிடம் முதலில் தாக்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து அருகில் இருந்த தங்குமிடம் குறிவைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"ரஷ்யா பதற்றத்தைத் தணிக்க விரும்பவில்லை என்பதற்கு இது மேலும் ஒரு சான்று" என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

கொலை செய்ய திட்டம்:

தெற்கு ஜபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள கோமிஷுவாகா கிராமத்தில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. அதே நேரத்தில், நாட்டின் தெற்கு பகுதியான கெர்சனில் அமலில் இருந்த வரையறுக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் திங்கள்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள முன்னணி பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லவும், மக்களை வெளியேற்றவும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

"அமைதிக்கான பாதையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருந்த தருணம் இது. ஆனால், இந்த தாக்குதல்கள் மூலம் ரஷ்யா முற்றிலும் மாறுபட்ட ஒரு செய்தியை உணர்த்துகிறது; அதாவது, மேலும் பல கொலைகளை செய்யவே ரஷ்யா திட்டமிட்டுள்ளது" என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

20 பேர் மாயம்:

பின்னர் நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, தற்காப்புக்கு தேவையான ஏவுகணைகளின் பற்றாக்குறையை உக்ரைன் எதிர்கொண்டுள்ள சூழலில், ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.

கோமிஷுவாகாவில் இரவு நேரமான நிலையில், உள்ளூர் அதிகாரிகள் இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் மற்றும் காணொளிகளின்படி, மீட்புப் படையினர் மின்விளக்குகளைப் பயன்படுத்தி இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு இடையே தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20 பேர் காணாமல் போயுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT