உலகம்

பிரிவினைவாதத்தை அடிப்படையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வளர்வது கவலை அளிக்கிறது - நியூயார்க் மேயர்

மோகன் பகவத்தின் அமெரிக்க நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் மம்தானி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு, தாம் ஆதரவளிக்கவில்லை என்று நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி கூறியுள்ளார்.

அதேவேளையில் அந்த தனியார் கூட்டத்தை தடுப்பதற்கு நகர நிர்வாகத்திற்கு சட்டப்பூர்வமான அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் கூட்டம்

நியூயார்க்கில் வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) அன்று, புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தை சேர்ந்த சுமார் 5,000 உறுப்பினர்கள் மத்தியில் மோகன் பகவத் உரையாற்ற உள்ளார்.

அவரது அமெரிக்க பயணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா உலகளாவிய மக்களை தொடர்பு கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற உள்ளது.

மம்தானி பூர்வீகம்

நியூயார்க் மேயரான ஜோஹ்ரன் மம்தானியின் பெற்றோர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களாக உள்ளனர். மம்தானியின் தந்தையான முகமது மம்தானி மும்பையில் பிறந்தவராகவும், அவரின் தாய் மீரா நாயர் ஒடிசாவில் பிறந்தவராகவும் அறியப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மோகன் பகவத் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து நியூயார்க் மேயர் மம்தானி கூறுகையில், தான் இந்திய-அமெரிக்கராக மட்டுமல்லாமல், நிறம், இனம், மதம், நம்பிக்கை அல்லது பூர்வீகம் என எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கு சொந்தமானவர்களாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பு தெரிவித்த மம்தானி

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் பேரணியை ஆதரிக்கவில்லை. ஆனால் ஒரு தனியார் நிகழ்வை ரத்து செய்ய நகருக்கு அதிகாரம் உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.

நமது நகர வரலாற்றில் முதல் இந்திய-அமெரிக்க மேயராக நான் இங்கு நிற்கிறேன். மேலும் என் தாயாரின் குடும்பத்தினர் அனைவரும் இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்.

எனது குடும்பத்தினர் எனக்கு கற்பித்த இந்தியாவை பற்றிய தொலைநோக்கு பார்வை, நான் நன்கு அறிந்து வளர்ந்த இந்தியாவின் பிம்பமும், பன்முகத்தன்மை கொண்ட சமூகமாகவும், இந்தியாவைச் சேர்ந்த ஒவ்வொரு தனிமனிதரும் தங்களுக்கு இதில் உரிமையுண்டு என்று உணரும் வகையிலான மதச்சார்பற்ற குடியரசாக திகழும் ஒரு நாடாகவே இருந்தன.

எந்தவொரு நாட்டையும் விலக்கி வைக்கும் அல்லது பிரிவினைவாத கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்கம் வளர்ந்து வருவதைக் காண்பது மிகுந்த கவலையளிக்கிறது.

எனவே, ஒரு இந்திய-அமெரிக்கராக மட்டுமல்லாமல், நிறம், இனம், மதம், நம்பிக்கை அல்லது பூர்வீகம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனும் எனக்கு சொந்தமானவர் என்று ஆழமாக நம்பும் மனிதராக, இந்த இயக்கத்தை நான் மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

அமைப்புகள் கோரிக்கை

இந்த நிலையில் அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்ட இந்த நிகழ்வு, பல்வேறு மத நல்லிணக்க மற்றும் குடிமை உரிமைகள் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

மனித உரிமைகளுக்கான இந்துக்கள், இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் மற்றும் நியூயார்க்கின் மத நல்லிணக்க மையம் உள்ளிட்ட குழுக்கள், நியூயார்க் நகர மன்றத்திற்கு வெளியே செய்தியாளர் சந்திப்பை நடத்தி அந்த நிகழ்வை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளது.