ஜெர்மனியில் விரக்தியின் உச்சிக்கு சென்ற பெண் ஒருவர், கவலை தாங்காமல் அழுது கொண்டு விளையாட்டு மைதானத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்ததால் அபராதம் கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஜெர்மனியின் கெல்சென்கிர்சென் (Gelsenkirchen) நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் போட்டப்பட்டிருந்த இருக்கையில் ஹனா (31) என்ற பெண் கடந்த அக்டோபர் 25-ம் தேதி அமர்ந்திருந்தார். படிப்பு மற்றும் குடும்பப் பொருளாதாரப் பிரச்சினைகளால் மன அழுத்தத்தில் இருந்த அவர், தனது அத்தையுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டே அழுதுள்ளார்.
அப்போது அங்கு வந்த மூன்று நகராட்சி ஒழுங்குமுறை அதிகாரிகள், அருகில் விளையாடிய குழந்தைகள் அவருடைய குழந்தைகளா எனக் கேட்டுள்ளனர். இல்லை என்று அவர் தெரிவித்ததும், குழந்தைகள் இல்லாமல் விளையாட்டு மைதானத்தில் உள்ள பெஞ்சிலவ் இருப்பது விதிமீறல் எனக் கூறி 25 யூரோ அபராதம் விதித்துள்ளனர். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,300 முதல் ரூ.2,500 வரை ஆகும்.
ஜெர்மனியின் உள்ளூர் விதிகளின்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களில், குழந்தைகளைப் பொறுப்புடன் அழைத்து வரும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் மட்டுமே இருக்க அனுமதி உண்டு.
இந்த நடவடிக்கைக்கு ஹனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். எச்சரிக்கை செய்திருந்தாலே போதுமானது என்றும், மனிதாபிமானத்துடன் அதிகாரிகள் நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நகராட்சி நிர்வாகமோ, விதிமுறைகளின்படியே அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் ஜெர்மனியில் சட்டம் முக்கியமா, மனிதாபிமானம் முக்கியமா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.