ஜெர்மனியின் கொலோன் நகரில், 16 வயது சிறுமி ஒருவரிடம் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாகக் கூறி ஒரு ரோபோவை அந்நாட்டுப் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த ரோபோவை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தி, அச்சிறுமியிடம் தவறாக நடக்கச் செய்ததாக 16 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் மீது போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வினோத மற்றும் அதிர்ச்சிகரமான குற்றச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நார்த் ரைன் வெஸ்ட்ஃபாலியா மாநிலக் காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் கொலோன் நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு துரித உணவு உணவகத்தின் முன்பாக அந்த 16 வயது சிறுமி தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, சுமார் 120 சென்டிமீட்டர் உயரமுள்ள, சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான ஒரு ரோபோ பின் பக்கமாக அச்சிறுமியை நோக்கி நெருங்கியுள்ளது.
திடீரென அந்த ரோபோ, சிறுமியின் பின்பகுதியில் தவறான முறையில் தொட்டதுடன், அநாகரீகமான அசைவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.
உடனடியாக இது குறித்து அவசரக் காவல் உதவி எண்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, அடுத்த தெருவிலேயே சந்தேகத்திற்குரிய அந்த 16 வயது சிறுவனையும் அதாவது ரோபோவின் உரிமையாளரையும், அவனது 19 வயது நண்பனையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்கள் காரின் பின் இருக்கையில் அந்த ரோபோவை மறைத்து வைத்திருந்த போது பிடிபட்டனர்.
விசாரணையில், இந்த இளைஞர்கள் இருவரும் அந்த ரோபோ செய்த அநாகரீகச் செயலைச் சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ததோடு, அதற்குக் கேலியான கமெண்டுகளையும் கொடுத்துக் கொண்டாடிய அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.
போலீசார் வெளியிட்ட புகைப்படத்தின்படி, அந்த ரோபோவிற்குப் போலியான மீசை ஒட்டப்பட்டு, கழுத்தில் தங்க நிறச் சங்கிலி மற்றும் வெள்ளை நிறப் பனியன் அணிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் அந்த ரோபோவுடன் சேர்த்து, குற்றவாளிகளின் இரண்டு மொபைல் போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பவத்தின் போது ரோபோவின் அசைவுகளை இந்த இளைஞர்கள்தான் திட்டமிட்டு ரிமோட் மூலம் கட்டுப்படுத்தினார்களா என்பதைத் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த வினோத வழக்கு குறித்துச் சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இது குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ள கொலோன் நகரப் போலீசார், "இந்த வழக்கு குறித்துச் சமூக வலைத்தளங்களில் எல்லை மீறி கமெண்ட் செய்பவர்களின் கருத்துக்கள் கடுமையான குற்றமாகக் கருதப்பட்டு, அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்பத்தைத் தவறான முறையில் பயன்படுத்திச் சிறுமியிடம் அத்துமீறிய இந்தச் சம்பவம் ஜெர்மனியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.