சவுதி அரேபியாவின் ரியாத் பகுதியில் உள்ள மூஸா சனய்யா என்ற இடத்தில் இயங்கி வந்த சோபா தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 16 வங்கதேசத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரியாத் அருகில் உள்ள சோபா தொழிற்சாலையில் நேற்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் திடீரென தீப்பற்றியது.
தீ மிக வேகமாக தொழிற்சாலை முழுவதும் பரவியதால், அங்கிருந்த தொழிலாளர்களால் தப்பிக்க முடியாமல் போயுள்ளது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு பணியாற்றிய 16 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
ரியாத்தில் உள்ள வங்கதேசத் தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டு விவரங்களைச் சேகரித்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணவும், சட்டப்பூர்வ நடைமுறைகளை முடித்து உடல்களைத் தாயகம் கொண்டு வரவும் சவுதி அதிகாரிகளுடன் தூதரகம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள வங்கதேச வெளியுறவு அமைச்சகம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.