லெபனானில் செய்தி சேகரித்து வழங்கிக் கொண்டிருந்த செய்தியாளர் ஏவுகணை தாக்குதலில் உயிர்தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெற்கு லெபனானில், ஒரு ரஷ்ய செய்தியாளர் மற்றும் அவரது ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த இடத்தில் இருந்து பத்து மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேலிய தாக்குதல் நடந்ததில், அவர்கள் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலங்கள் சூழ்ந்தது, தாக்குதலை கனநேரத்தில் உணர்ந்த செய்தியாளர் ஸ்டீவ் ஸ்வீனி துரிதமாக செயல்பட்டு பதுங்கிக் கொள்ளும் காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
ஸ்வீனியும், அவரது ஒளிப்பதிவாளர் அலி ரிடாவும், உள்ளூர் இராணுவத் தளத்திற்கு அருகிலுள்ள அல்-காஸ்மியா பாலத்திற்கு அருகே படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தனர். இருவரும் சுயநினைவுடன் இருப்பதாகவும், உள்ளூர் மருத்துவமனையில் மருத்துவ உதவி பெற்று வருவதாகவும் ரஷ்ய சேனலான RT செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்வீனியின் கையில் இருந்து மருத்துவர்கள் சிதறல்களை அகற்றுவதைக் காட்டும் மற்றொரு காணொளியையும் ரிடா பகிர்ந்துள்ளார். மற்றொரு காணொளியில், ஏவுகணை ஒன்று நம்மை நோக்கி வரும்போது, "அதன் சத்தத்தைக் கேட்க முடிகிறது" என்று தானும் ஸ்வீனியும் கேலி செய்ததாக அந்த ஒளிப்பதிவாளர் கூறியுள்ளார்.
தங்கள் சீருடைகளில் பத்திரிகையாளர் அடையாள அட்டைகள் இருந்தபோதிலும், இஸ்ரேலியப் படைகள் தங்களை வேண்டுமென்றே தாக்கியதாகவும் ரிடா குற்றம் சாட்டியுள்ளார்.